கண்ணாடியுள் விரியும் ஸ்தெப்பிவெளி
கண்ணாடியுள் விரியும்
ஸ்தெப்பிவெளி சாரதி. .
சந்தானகிருஷ்ணனிடமிருந்த கடைசிப்பொருள் அந்த
கண்ணாடிதான். அவன் தாத்தாவின் அய்யா சிவராமகிருஷ்ணன்தான்
கடலோடியாய் அலையும்போது சீன மாலுமி ஒருவர் தனக்கு அவரின் அன்பின் சாட்சியாக கொடுத்ததாகக்
குறிப்பு எழுதி ஒரு விசித்திரமான தோல் பையில், பழைய கிராம்போன் பெட்டிக்கடியில் வைத்திருந்தார்.
இவையெல்லாம், வெகுகாலமாக திறக்கப்படாத அறையில் ஒரு பெரிய மரப்பெட்டியில் வைத்து பூட்டப்பட்டு
கிடந்தது. அதை எதற்காக எடுத்தார் என்று சந்தானகிருஷ்ணனுக்கே தெரியாது. ஒரு வேளை அவர்
காதலியின் நீண்டகால நினைவிலிருந்து தப்பிக்க ஏதாவது ஒரு வழியை தேடுகிறாரோ… என்னவோ?.
சந்தானகிருஷ்ணனுக்கு இப்பொழுது வயது அறுபது இருக்கும். அவர் காதலித்த சிறிது காலத்திலேயே, அவள் விபத்தில்
இறந்து விட்டாள். அதன் பின் திருமணம் செய்து கொள்ளாமலே தனி ஆளாகவே இவ்வளவு காலங்கள் கழித்து விட்டார். அவர் காதலி மீரா. அவள் பெயரை சொல்லி அழைத்ததும்
சந்தானகிருஷ்ணன் மேனி படபடக்க புளகாங்கிதம் அடைவார். அந்த நிமிடம் அவரின் கால்கள் பூமியில் நிற்காது.
கனவில் கால் பதித்து காலத்தை சுழற்றுவார்.
காலத்தில் கரையேறி வானை தொடுவார். அவர் மீராவோடு
வாழ்ந்த வாழ்க்கையை, கண்ணாடிகளின் வேறுவேறு கால மனிதர்கள், சதாவும் சொல்லிக்கொண்டேதான்
இருந்தார்கள். முதன் முதலில் மீராவை, சந்தானகிருஷ்ணன் தனது கண்ணாடிக்கடையில் வைத்துதான்
பார்த்தார். மீரா அப்படியொரு அழகு. அவளை பார்த்த அந்த கணம் சந்தானகிருஷ்ணன் மனம் படபடத்து
என்னவெல்லமோ செய்தது. இப்படி ஒரு அழகை அவர்
இதற்கு முன் இந்த நகரில் பார்த்ததேயில்லை. கண்ணாடி கடைக்கு வெளியிலிருந்து வந்தாளா?
அல்லது கண்ணாடிக்குள்ளிருந்து வந்தாளா? எப்படி
வந்தாள் ? எப்போது வந்தாள் என்பதை அவரால் அனுமானிக்கவே முடியவில்லை. ஒரு வேளை அந்த
நீல நிறக் கண்ணாடிக்குள்ளிருந்து வந்திருப்பாளோ? தெரியவில்லை. ஆனால், .மீரா அவருக்குப்
பிடித்த ருஷ்ய அழகு சீமாட்டிகள் போல் ஸ்தெப்பி புல்வெளியில் புரளும் வர்ணஜாலங்களில்
ஜரிகையாலான கவுனை அணிந்திருந்தாள். இதற்கு முன்பு இப்படி எந்தப்பெண்ணையும் அவர் பார்த்ததேயில்லை.
.சந்தானகிருஷ்ணன் வடித்து வைத்த சிலை போல்
நின்றிருந்தார். மீராவும் தன் அழகிய விழிகளால்
ஜாடை காட்டியது போல் சந்தானகிருஷ்ணனை பார்த்தாள். சந்தானகிருஷ்ணன் சிவந்த திரேகத்தில் உயரமான மனிதர்.
அகன்ற நெற்றி. எடுப்பான முகம். இருவரும் இப்படித்தான்
அறிமுகமானார்கள். சந்தானகிருஷ்ணன் கண்ணாடிகளுடன் பேசும் விதம்விதமான பாஷைகளைக் கண்டு
மீரா ஆச்சரியப்பட்டாள். .சந்தானகிருஷ்ணன் அங்கிருந்த ஒவ்வொரு கண்ணாடிகளைப் பற்றியும்
பேசினார். அதிலும் பெல்ஜியம் கண்ணாடிகளின் சிறப்பு ரகங்கள். புதிய வடிவமைப்புடன், சித்திர
வேலைப்பாட்டுடன் எங்குமில்லாத பெரிய பெரிய கண்ணாடிகள், கூத்து கலைஞர்களுக்கான கண்ணாடிகள்,
நாடகக் கலைஞர்களுக்கான கண்ணாடிகள், நாட்டிய கலைஞர்களுக்கு, தேவதாசிகளுக்கான கண்ணாடிகள்,
மிட்டா மிராசுதாரர்கள், கிராமத்து பண்ணைகள், பெரிய ஜமீன்கள்... இவர்களின் ரசனைக்கேற்ற
கண்ணாடிகள்…..இப்படி எல்லாவற்றையும் பற்றிப் பேசினார். சந்தானகிருஷ்ணன் பல இரவுபகல்களில்
கண்ணாடிகளின் உலகம் பற்றி மீராவுடன் மந்திர வரிகளாய் பேசினார். மீரா காதல் வயப்பட்டு,
சந்தானகிருஷ்ணன் பேச்சுக்களின் பின்னால் தூக்கமற்று சென்றாள். சந்தானகிருஷ்ணனின் மின்னலாய்
பற்றி எரியும் அதீத வார்த்தைகளில், கண்ணாடிகள் விநோதமாக மாறுவதைக் கண்ட மீராவுக்கு,
சந்தானகிருஷ்ணன் மேல் தீராத காதல் வந்தது.
அவன் தாத்தா கோபாலகிருஷ்ணன் வடித்த கண்ணாடியின் வழியே வடிந்துருகிய அவர்கள்
காதலை, திசையற்ற காற்றின் வழியே வரவேற்றார். தான்தோன்றியாய் கண்ணாடிகளின் உறவின் அர்த்தத்தைப்
புரிந்து கொண்ட மீராவை அவர் தாத்தாவுக்கு நிரம்பவே பிடித்து விட்டது. அவர் தாத்தாதான்,
எல்லா நிலையிலும் முரண் பட்ட சந்தானகிருஷ்ணன் அப்பாவுடன் எத்தனையோ முறை பேசி சமன்செய்து,
சண்டையிட்டு முடிவாக மீரா-சந்தானகிருஷ்ணன் திருமணத்தை நடத்த ஏற்பாடும் செய்தார். அதன்
பின்தான் சந்தானகிருஷ்ணனும் மீராவும் கண்ணாடிகளின் அற்புத உலகின் உச்சத்திற்கே சென்றார்கள்.
காலமாற்றத்தில் கண்ணாடிகள் எவ்வளவோ அபத்ததையும்
சந்திக்கத்தான் செய்தது. இந்த காலத்தில்தான்
என்னவெல்லாமோ நடந்துவிட்டது. அவன் காதலி மீரா, தாத்தா, அப்பா… அடுத்தடுத்து இறந்தது,
சந்தானகிருஷ்ணனை தீராத துயரத்தில் ஆழ்த்தியது.
மீராவின் மரணம் ஒரு கோர விபத்தில் கண்ணாடிகளே காணமுடியாத ஒரு இரவில்தான் நடந்தது.
மீராவை தேடி கண்ணாடிக்குள் எங்கெல்லாமோ தேடி
அலைந்தார் சந்தானகிருஷ்ணன். கண்ணாடிகளில் உறவுகளின்
மரணம் என்பதே என்றென்றும் இல்லை என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார். ஆனாலும் மீராவை
தேடித்தேடி அவரின் கண்களும், மனமும் அவரை அறியாமலேயே ஸ்தெப்பிவெளியில் சிதைத்த கரும்பிளவாய்
வெடித்து வெடித்து தீராத சோர்வில் மூழ்கியது. தாத்தா, அப்பா இறப்புக்குப்பின் சந்தானகிருஷ்ணன்
கண்ணாடிகளோடு பேசும் வார்த்தைகள் முழுவதுமே குறைந்து விட்டது. அதன்பின் தனியாகவே கண்ணாடிகளின் உள்ளும் வெளியும்
காலஉறவுகளின் வேறுவேறு மனிதர்களின் கனவு வெளியில் வாழ பழகிக்கொண்டார். அவரின் காலம்
கண்ணாடி உறவுகளோடு தூரதூரமாய் சென்றது. சந்தானகிருஷ்ணன் இப்பொழுதெல்லாம் கண்ணாடிக்
குள்ளிருந்து வெளி வரும் விதம் விதமான மனிதர்களிடம், அவரவர்களின் மொழியிலேயே பேசிக்கொண்டிருப்பார். சில நேரம் இவரே கண்ணாடிக்குள் சென்று யாரோ ஒருவருடன்
பேசிக்கொண்டார்.. அந்த பேச்சுக்களிலெல்லாம் அவரின் அன்பு காதலி மீரா சொல்லமறந்த கனவின்
கவிதைகள் கசிந்து உருகியது. யாரிடமோ சில நேரம் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருப்பார்.
அல்லது கோபமாக பேசிக்கொண்டிருப்பார். அல்லது எதுவும் சொல்லாமல் அழுது கொண்டிருப்பார்.
திடீரென்று கண்ணாடிக்குள் யாரோ ஒரு முகம்தெரியாத பாடகரின் பாடலையோ, அல்லது நடனத்தையோ
ரசித்துக்கொண்டிருப்பார். சிலசமயம் அவர் என்ன
செய்யப் போகிறார்? என்று அவருக்கே தெரியாமல் கண்ணாடியையே இமைகள் மூடாமல் பார்த்துக்கொண்டிருப்பார்.
ஒரு நாள்
திடீரென்று கடையில் பேச்சுச்சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. குரல் எந்த திசையிலிருந்துதான்
வருகிறது என்றே தெரியவில்லை. நான்கு திசையிலும் தேடிப்பார்த்தாகி விட்டது. கண்ணாடிகளுக்கு பின்னால், கண்ணாடி பீரோவுக்குள்,
கடையின் இண்டு இடுக்குகளிலெல்லாம் காதுகளை கூர்மையாக்கி கேட்டதுதான் மிச்சம். எங்கும்
சந்தானகிருஷ்ணனைக் காணவில்லை. முடிவில் அந்த சீன மாயக்கண்ணாடிக்குள் அவரின் பேச்சுச்சத்தம்
கேட்டுக்கொண்டிருந்தது. ஆம்… அவரேதான்.. தூரத்தில்
யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். அவருடன் பேசிக்கொண்டிருந்தது ஒரு பெண். அந்தப்பெண் மிகவும் அழகாயிருந்தாள். அவள் வெள்ளை
நிறத்தில் பொன்னிற ஜரிகைகளில் அபூர்வமான சிறிய வண்ண வண்ண பூக்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாய்
மேக வர்ணங்களால் தீட்டப்பட்ட அழகிய கவுன் உடுத்தியிருந்தாள். அந்தப் பெண் மீராதானா…. ஒருவேளை அப்படி இருந்தால்
சந்தானகிருஷ்ணனோடு வந்திருப்பாள். ஆனால், அந்தப்பெண்ணுக்கு இந்திய பெண்களுக்கான எந்த
சாயலும் இல்லை. அவர் தன்னை மறந்து அந்தப்பெண்ணோடு
கை கோர்த்து சென்று கொண்டிருந்தார். அந்தப்பெண் அவரோடு வெகுகாலமாக பழகியவள் போல்
பேசிச்சென்று கொண்டிருந்தாள். ஆனால், அவள் பேச்சில் நிதானம் தெரிந்தது. இப்படி நிதானமாக பேசுவது மீராவைத் தவிர வேறு யாரும்
இருக்க முடியாது. அவர்கள் பேசிக்கொண்டே ரொம்ப தூரம் நடந்து சென்று விட்டார்கள். அந்தப்
பெண்தான் அதிக நேரம் பேசிக்கொண்டிருப்பாள். சந்தானகிருஷ்ணன் கேட்பவராக மட்டுமே இருந்தார்.
கேட்கும் லயிப்பில் எப்படி மூழ்கினார் என்று
அவருக்கே தெரியவில்லை. அவர்கள் பேசியது ருஷ்ய மொழி. சந்தானகிருஷ்ணன் ருஷ்ய மொழியில் சரளமாக பேசுவார்.
அவருக்கு எத்தனையோ காதல் மொழிகள் தெரிந்திருந்தது.
ஆனால், அவர் மதிமயங்கியது ருஷ்ய காதல் மொழிதான். அது எப்படி நடந்தது என்பது ஒரு ஆச்சரியமான விசயம்தான்.
இந்த நிகழ்வு நடந்தது, ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு
முந்தியதாகத்தான் இருக்கும். சந்தானகிருஷ்ணனின் அழகிய கண்கள் தீராத காதல் வலையில் சிக்கிய
காலம். வார்த்தைகளின் உண்மைகளையும், அதன் நேசத்தையும் ஏன் காதலையும் தேடிக்கொண்டிருந்த
காலம்.
ஒரு நாள் கண்ணாடிக்குள்ளிருந்து வெளிவந்த வைத்தியலிங்கம்தான்
காதல்மொழியின் கனவு வார்த்தைகளைப் பற்றி பேச ஆரம்பித்தார். அந்த வார்த்தைகளின் கனவுப்பாதையில் பறவைகளின் சிறகசைப்பில்
துர்க்கனேவ், டால்ஸ்டாய், தாஸ்தோவெஸ்கி….. என ருஷ்ய வார்த்தைளின் அபூர்வ குகைக்குள்
சட்டென சிக்கிக்கொண்டார். அந்தக் கனவுக்குகையிலிருந்து அவரால் என்றென்றும் மீளவே முடியவில்லை.
அதன் பின்தான் அவருக்கு பிடித்த காதல் மொழி ருஷ்ய மொழியானது. அவர்கள் ருஷ்ய காதல்
வார்த்தைகளின் விளிம்பில் ஒருவருக்கொருவர் ஆதரவாய் பிடித்து நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
அவர்கள் செல்லச்செல்ல பாதை அவர்கள் முன் விரிந்தது. பாதைகள் விரிய விரிய கண்களுக்கு முன் அழகிய ஸ்தெப்பி
புல்வெளியானது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஸ்தெப்பி புல்வெளிதான். ஸ்தெப்பிவெளியில்
பேசிச் செல்வதென்பதே அலாதியானதுதான். அவரோடு சென்று கொண்டிருந்த அந்தப்பெண் யாராயிருக்க முடியும். தஸ்தோவெஸ்கியின் நாஷ்தென்காவா? அல்லது அவன் அன்பு
மீராவா? நாஷ்தென்கா என்றால் நிச்சயமாக உங்களுக்கு
தெரிந்திருக்கும். ஆனால், மீராவைத்தான் சந்தானகிருஷ்ணன் சதாவும் பார்த்துக் கொண்டிருக்கிறானே.
நாஷ்தென்காவின் ஆடைக்குள் மீரா எத்தனை அழகுடன் இருந்தாள். அவள் ஒரு ருஷ்யப்பெண் என்று
சொல்லவும் முடியாது. அவர்கள் இருவரும் ஸ்தெப்பியில்
வெகு தூரம் சென்று விட்டார்கள். எவ்வளவு தூரம்
சென்றார்களோ……… ஆனால், நேரம் போனதே தெரியவில்லை. இரவும் வந்து விட்டது. அந்த இரவு அவர்களுக்கு மறக்க முடியாத ஒரு அழகிய இரவானது. அவர் இதுவரை அனுபவித்திராத ஒரு வெண்ணிற இரவு. அது மிகவும் அவர்கள் அருகில் வந்திருந்தது.
அவள் சந்தானகிருஷ்ணனுடன் எவ்வளவோ பேசிவிட்டாள். இனி, தான் பேசுவதில் அர்த்தமில்லை என்பதை புரிந்த
அந்த நிமிடத்தில், அவள் பேசுவதை நிறுத்திக்கொண்டாள். அவர் என்னதான் நடக்கிறது என்பதை
நிதானிக்கும் முன், ஒரு கடிதத்தை அவரிடம் கொடுத்தாள். அன்புள்ளம் கொண்ட அன்பர்களே…
காதல் உள்ளம் கொண்டவர்களால் மட்டுமே அந்த வெண்ணிற இரவை உணர்ந்து கொள்ள முடியும்.
அப்படி ஒரு இரவு அது. முழு நிலவின் கீழ் விரிந்திருந்த அந்த ஸ்தெப்பி வெளியில், மீராவின்
கண் அசைவில், மெளன வார்த்தைகளில் காலம்காலமாக பேசியது போல் அவர் பேசினார்.
அந்த வெண்ணிற இரவினை முழுமையாக உணர்ந்திருந்து அவர் கண்களை மூடி நின்றிருந்தார். அந்த
மாதிரியான ஒரு பொழுதில் தான் அந்த கடிதத்தை சந்தானகிருஷ்ணனிடம் அவள் கொடுத்தாள்..
அவள் அவருக்கு எழுதிய கடிதத்தின் வரிகள் இதுதான்
.
“ஆம்… இத்தருணத்தில் உங்களை நான், அப்படி நேசிக்கிறேன்,
உங்களது காதலுக்கு ஏற்றவள் நான், என்றும் ஏற்றவளாயிருக்கவே விரும்புகிறேன்…. அருமையிலும்
அருமையான என் நண்பரே …..நான் உங்களோடு இந்த
கணத்தில் வாழ்கிறேன்… வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பூமியின்
எத்திசையிலும் சுற்றி சுழலும் அன்பின் ஈரக்காற்றில் கண்ணாடிகளின் பிம்ப நிழலாய் உங்களோடு
வாழ்கிறேன். இந்த வெண்ணிற இரவில் முழுநிலவின்
சாட்சியாக நீங்கள் என்னை, மறவாதிருக்க வேண்டும். காதலிக்க வேண்டும்,”
உங்களுடைய…………
அந்த கடிதத்தின்
வார்த்தைகளில் தத்தளித்து எதுவும் பேசமுடியாமல். கண்களை அவரால் திறக்கவே முடியவில்லை.
அதன்பிறகு, சந்தானகிருஷ்ணன் இரண்டு நாள் கழித்து கண்விழித்த போது கையில் கடிதத்துடன்
கண்ணாடிக்கு வெளியே கிடந்தார்.
நன்றி
கதை சொல்லி/நவம்பர்,2019
அருமையான சிறுகதை
ReplyDelete