அவனின் கழிவறை


அவனின் கழிவறை
                              சாரதி

The Swachh Bharat Mission aims to achieve 100% open defecation free (ODF) and scientific solid waste management in India by 2 October 2019, the 150th birthday anniversary of Mahatma Gandhi. Photo: Indranil Bhoumik/Mint
  .   ஆத்திர அவசரத்துக்கு வந்தே தொலையாது. அடுத்து அடுத்து வேலை இருக்கு.  இதுல போய் உட்கார்ந்திட்டு. இவ்வளவுக்கும் ரெண்டு தடவை டீ குடிச்சாச்சு.  நாலு தடவை வாக்கிங் போயாச்சு.  எல்லாம் நடந்த பிறகும் சின்ன அசைவு கூட இல்லை.  நமக்கு எந்த பிரச்சனைதான் அசையுது.  எல்லாம் அப்படி அப்படி நிற்கிறது.  சரி ஒவ்வொரு பிரச்சனையாகவே முடியட்டும்.  இப்பொழுது முக்கியமானது, சின்ன பிள்ளைக்கு காலேஜ் பீஸ் கட்டணும்.  அது முடிஞ்சா கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். பணத்தை ஓரளவுக்கு பிறட்டியாச்சி.  ஒரு நாற்பதாயிரம் ரூபாய் கிடைக்க மாட்டேங்குது.  என்னன்னு தெரியல.  இப்படி இருந்ததேயில்லை. கேட்டவங்கல்லாம் கையை விரிச்சிட்டாங்க.  காலையில் நாராயணன் வரச்சொல்லியிருக்கான்.  அவனிடம் இது வரை கேட்டதே இல்லை. அவனிடம் கேட்பதற்கு எப்பமும் ஒரு யோசனையாகத்தான் இருக்கும். அதனால், அவனிடம் கேட்காமலேயே பல வழிகளில் சமாளித்து விடுவான்.  ஆனால், இப்பொழுது நிலைமை அப்படி இல்லை. அவனை பார்த்தால்தான் எப்படியும் கதை தேறும். ஏற்கனவே அவனிடம் கைபேசியில் பேசிவிட்டான். அவன் ஒரு பத்து மணி பாக்குல வா...பாக்கலாம்னு சொல்லியிருக்கான். அவன் ரிட்டயர்டு ஆன பணமெல்லாம் அங்க இங்க வாங்குன கடனை அடச்சிட்டு கொஞ்சம் செலவுக்கு போக, ஏதாவது பேங்க்ல போட்டிருப்பான். அதிலிருந்து எடுத்துத் தருவான்னு நினைக்கேன். அவனிடம் வாங்கும் பணத்தை சீக்கிரம் கொடுத்திடணும். அவனும் பாவம்தான். அந்த பணம்தான் அவன் மகள் கல்யாணத்துக்கு வச்சிருப்பான். அவன் மகளும் படிச்சிகிட்டுதான் இருக்கிறாள். இப்போதைக்கு அவனுக்கு பிரச்சனை இல்லை. அவனை புரிந்து கொண்டவர்களில் நாரயணனும் ஒருவன்.  இருந்தாலும் அவன் பணத்தை சீக்கிரம் கொடுத்து விடவேண்டும்.
சரி..சரி…… இப்பம் முதல்ல மார்க்கெட்டுக்கு போணும். இவ வேற னொன்னங்க...னொன்னங்க...ன்னு ரெண்டு, மூனு தடவை கூப்பிட்டு விட்டாள். என்ன அவசரமோ, வேற யாரு வந்திருப்பாங்களோ...தெரியலையே?  பெரியவ வேற  இரண்டு தடவை கதவை தட்டிட்டா. செல்போன் வேற.. அடிக்கற சத்தம் கேக்குது . மனுசன் நிம்மதியா.. கக்கூசுக்குள்ள காரியத்த நடத்த முடியுதா.. .ச்சே என்னடா வாழ்க்கை.  இவ்வளவு நடக்குது.  இன்னும் இந்த எழவு வந்த பாடில்ல. ஓங்கி ஒரு முக்கு முக்கினாவது வந்திறனும். முயற்சி பண்ணித்தான் பார்ப்போமே. நேற்று கூட இந்து தமிழ் நாளிதழில் உடல் ஆரோக்கியம் பக்கத்தில் மலம் கழிப்பதைப்பற்றி போப் கட்டுரை எழுதியிருந்தார். அதில் நாம் மலம் கழிப்புக்கு நம்மை தயார் செய்து கொண்டு, கழிப்பறையில் போய் உட்கார்ந்ததும் பாம்பு மாதிரி நொலு நொலுவென பிசுறில்லாமல் வந்தால்தான் ஆரோக்கியம் என குறிப்பிட்டிருந்தார். அதைப் படிக்கும் போது நல்லாதான் இருந்தது. அதில் சொன்ன பிரகாரம், கழிப்பறைக்கு போவதற்காக ஆயத்தப்படுத்தும் போதுதான், ஏதாவது முக்கியமான பிரச்சனை முன்ன வந்து நிற்கிறது. அந்த பிரச்சனையோடு உள்ள போகும் போது எப்படி பாம்பு மாதிரி விழும், ஒரு சிறு புழுக்கை கூட விழாது. யார் என்னத்தான் சொன்னாலும், அவன் அவன்தான் இதை தீர்மானிக்க வேண்டும். என்ன செய்ய. இந்த வேலை முடிஞ்சாத்தானே… அடுத்ததுக்கு நகர முடியும்.  வெளியில் இவள் சத்தம் வேறு கேட்டுக் கொண்டேதான் இருந்தது. வீட்டுக்கு .யாரு வந்திருந்தாலும், அவங்ககிட்ட பேச வேண்டும் என்றால், முதலில் இந்த வேலை முடியனும். அப்புறம்தான் கைபேசியில்கூட பேச முடியும்.  டக்குன்னு வந்தமா போனமான்னு இல்லாம.  ச்சே…எல்லாம் ஒன்னு போல இப்படி நெருக்கடி பண்ணினா மனுச.. என்னதான் செய்வான்.  இப்படி அவசரப்பட்டாலே…. ஒரு கதையும் தேறாது. வயிறு வேற மொந்து மொந்துன்னு. வயிற்றுக்குள்ளிருந்து அவ்வளத்தையும் மொத்தமா வெளியேத்தலேன்னா. இன்னைக்கு முழுக்க ஒரு வேலையும் ஒழுங்காக நடக்காது.
“மனுசன் இவ்வளவு நேரமா உள்ள போய் உக்காந்திட்டா...எப்படி? கக்கூசுக்குள்ள என்ன செய்வாரு... உள்ள ஒக்காந்துகிட்டு ஒன்னு உலகத்தைப்பத்தி யோசிப்பாரு.. இல்லாட்டி கதைகதைன்னு கதையோட பேசுவாரு..  வேற என்ன நடக்கும்.  இப்படி இருந்தா உள்ள எதுக்கு போனாரோ... அந்த வேலை மயிறா…….. நடக்கும்... ஏதோ உள்ள போனோம்…..வந்தோம்னு இல்லாம.  காலைலேயே எந்திருச்சி தொலைச்சி போங்கன்னா… போகாம….. எட்டு மணிக்கு எந்திருச்சிகிட்டு…..கர்மம்...கர்மம்… மத்தவங்கள பத்தின நினப்பே இவருக்கு கிடையாது.”  அவன் மனைவி கூப்பாடு போட்டாள்.  
               இப்படித்தான் இதற்கு முன்னால் அவன் அம்மா கூப்பாடு போடுவாள். இப்பொழுது இவன் மனைவி. அவன் அம்மா கூப்பாடு போடும் போது அவன் வேலையில்லாத காலம்.  அப்பொழுது அவர்கள் குடியிருந்தது ஒரு  வளவு வீடு.  அந்த வளவில் ஐந்து வீடுகள் இருக்கும்.  ஆனால், ஒரே கழிப்பறை.  யாராவது ஒரு ஆள் சென்று, விரைவில் வந்தால்தான் அடுத்த ஆள் செல்ல முடியும்.  அதில் விவரமான பொம்பிளங்கெல்லாம் அதிகாலைலேயே போயிட்டு வந்திருவாங்க. சில ஆம்பிளங்கெல்லாம் வெட்டவெளிக்கு போயிருவாங்க.  அவனை மாதிரி கொஞ்ச பேர் இருக்கிறார்கள். எட்டு மணிக்கு எந்திருச்சி, காலை கடனுக்காக அந்த ஒரே கழிப்பறைக்குத்தான் போக வேண்டும். யார் முந்தினாங்களோ………அவங்க ஜெயிச்சிட்டாங்க. பிந்தியவர்கள் அங்கும் இங்கும் புசமுட்டிக்கொண்டு வருவார்கள். இதில் சில நேரம் அவன் முந்தி விடுவான். அந்த மாதிரியான நேரங்களில் அவ்வளவுதான். வெளிய ஒரே கூப்பாடாக இருக்கும். அவன் அம்மாவிடம் ஒரே ஆவலாதிதான். லயனே அல்லோலப்பட்டு விடும்.
“ இங்க பாருங்கம்மா.. உங்க பிள்ள செய்றது கொஞ்சமாவது ஞாயமா… கக்கூசுக்குள்ள போயி இப்படி உள்ள குடியிருந்தா… நாங்கல்லாம் எங்க போறது? அவன் அவனுக்கு ஆயிரம் வேலை இருக்குல்லா… இப்படித்தான் அன்னைக்கு அந்த வயசான அம்மா வயித்தால போயி தட்டலஞ்சிக்கிட்டு வந்தாங்க.. கடைசியில அந்த அம்மா.. உடுத்தின துணியெல்லாம் அசிங்கமாகி.. சந்துக்குள்ளதான் போச்சு…  அதக்கப்புறந்தான் உங்க மகன் கக்கூசுக்குள்ளயிருந்து ஒன்னும் தெரியாத மாதிரி வர்றாரு… ஏதாவது பிரச்சனையின்னா வெட்ட வெளிக்கு போகச்சொல்லுங்க…” என்றார் இரண்டாவது வீட்டுக்காரர். அவன் அம்மாவும் எத்தனையோ தடவை  அவனிடம் திட்டி விட்டாள்.
“ ஏலே...மூதேவி…. உள்ள என்னதான் சொரண்டுவயோ..தெரியல… அறிவு வேண்டாம்.. அடுத்தவங்க அஞ்சு நிமிஷம் செய்ற வேலைய, நீ அரை நாள் செய்ற… அந்த நாத்தம்பிடிச்ச இடத்தில என்னத்தான் யோசிச்சி தொலைவியோ தெரியல… இனிமே வந்தா வேற எங்கயாவது போய் தொலை.. இனிமே இந்த கக்கூசுக்குள்ள போன காலை ஒடிச்சிப் போடுவேன்.”  இப்படித்தான் அவன் அம்மா சொல்வாள்.
இதற்கும் முன்பு அவன் குடும்பம் இருந்தது மடத்து லயன் காம்பவுண்ட். அந்த மடத்து லயனில் பதிமூன்று வீடு இருக்கும். அந்த காம்பவுண்டுக்கு பின் புறம் இரண்டு வீடு. மொத்தம் பதினைந்து வீட்டுக்கும் ஐந்து கழிப்பறை. இவன் வீடுதான் முதலில் இருக்கும். இவன் வீட்டை ஒட்டிதான் ஐந்து கழிப்பறைகளும் வரிசையாக இருக்கும். இவன் அந்த நேரத்தில் பெரிய பத்து  படித்துக்கொண்டிருந்தான். . அந்த விடலைப்பருத்தில் புத்தி பேதலிச்சதனால், பாடத்தில் அதிகமாக கவனம் செல்ல வில்லை. வீட்டில் அம்மா, அப்பாவுக்கு இவன் மேல் அதிருப்தி வேறு. மொத்தத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், பெருங்குழப்பத்திலிருந்தான். அங்குள்ள கழிப்பறையில்தான் ஆழ்ந்து யோசித்து ஒரு முடிவெடுத்தான். தற்கொலை செய்து கொள்வதென்று. அதன்படி தற்கொலை செய்வதற்கு கண்ணாடி துண்டுகளை நுணுக்கி மாவாக்கி சாப்பிடுவதென்று முடிவெடுத்தான். அதை பள்ளியில் வைத்து சாப்பிட்டு அவனோடு படிக்கும் மாணவர்களுக்கு, அவன் வீடு, பக்கத்து வீடு, அவன் சகோதரியுடன் படித்த மாணவிகள், தெருவில் போகிற வருவர்கள், அப்படி இப்படியென்று ஏகப்பட்ட கூட்டம் அவன் வீட்டு முன் குவிந்து விட்டது. டாக்டர் வேறு அவனுக்கு வாழைப்பழம், முட்டை கலந்து கொடுத்தால், மலத்தின் மூலம் கண்ணாடித்துண்டுகள் எல்லாம் வெளியேறி விடும் என்று சொல்லி விட்டார். வீட்டு நடையில் அவனை உட்கார வைத்தார்கள். அவன் முன் ஒரு தாறு நாட்டு வாழைப்பழம், பத்து முப்பது முட்டைகள். அவனைச் சுற்றியுள்ள கூட்டம் அவனை விநோதமாக பார்த்தார்கள். பழத்தை உரித்தும், முட்டையை உடைத்தும் அவனுக்கு கொடுக்க ஆரம்பித்தார்கள். இவ்வளவு முட்டையும், வாழைப்பழத்தையும் மொத்தமாக பார்த்ததும் இவனுக்கு கொஞ்சம் பயம், அதே நேரத்தில் சந்தோசமாகத்தான் இருந்தது. அவன் ஏற்கனவே சாப்பாட்டுப் பிரியன் வேறு. அவனும் நன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனைச் சுற்றி அனைவரும் கொஞ்சம் பயத்துடன் சீரியசாக வேடிக்கை பார்த்தார்கள். ஏய்….பழத்தை சாப்பிடு….ஏய்….முட்டையைக் குடி…  ஒரே கூப்பாடும், அதட்டலும் கேட்டுக் கொண்டேயிருந்தது.  அடிச்சது யோகம். சாப்பிடுடா…தம்பி..சாப்பிடு. இப்படி ஒரு குரலும் கூட்டத்திலிருந்து வந்தது. அவனுக்கு ஒரு நமட்டு சிரிப்பு அவனுக்குள்ளிருந்தே வந்தது. கொடுத்ததை எல்லாம் சாப்பிட ஆரம்பித்தான். இவ்வளவு பழங்களையும், முட்டைகளையும் எப்படித்தான் சாப்பிட்டானோ… தெரியவில்லை. கொஞ்ச நேரத்தில் அவன் அம்மா அவனை கழிப்பறைக்கு சென்று வெளியேற்றுடா… என உத்திரவிட்டார்.  கழிப்பறை இருந்தது ஒரு மேடான பகுதி. கழிப்பறையைச் சுற்றி ஆணும், பெண்ணும் கீழே நூறு பேருக்கு மேலிருப்பார்கள்.  எம்மா...என்னம்மா… இது. அவன் மறுத்தான். அவனை நாலைந்து பேர் சேர்ந்து கழிப்பக்றைக்குள் தள்ளி விட்டார்கள். கழிப்பறைக்குள் சென்றதும் அவன் சுதந்திரமாகி விட்டான்.  இனி யாரும் உள்ளே வர முடியாது. அவன் சாப்பிட்ட பழத்திற்கும் முட்டைக்கும் மலமலவென வெளியேறி வர வேண்டும். ஆனால், மலம் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வெளியில் அவன் அம்மா வந்திருச்சா… என்றாள். அதைத்தொடர்ந்து ஒரு நூறு குரல்கள் வந்திருச்சா...வந்திருச்சா.. என்றது. அவன் கழிப்பறைக்குள் மேடை மேல் அமர்ந்திருந்தான். கீழே ஒரு நூறு பேர் மேடையை வேடிக்கை பார்ப்பது போல் கழிப்பறையை வேடிக்கை பார்த்தார்கள். அவன் உள்ளேயிருந்து கொண்டு பக்கத்தில் வந்து விட்டது…..ம்மா… வந்துடும்மா…. என்றான். வெளியில் இருந்து இவ்வளவு பேர் இப்படி கூப்பாடு போட்டால், அவன் என்னதான் செய்ய முடியும். மலம் கழிப்பது என்பது ஒரு ரகசியமான உணர்வு.  அது என்ன செய்யும். எந்த அசைவுமே இல்லாமல், இருந்தது. வெளியில் இருந்த கூட்டம் எதுவும் வரவில்லை என்றால் விடவே மாட்டார்கள்.  அவன் கழிப்பறையை விட்டு  முதலில் வெளியில் வரவேண்டும்.  உள்ளிருந்து தீர்க்கமாக யோசித்தான்.  அவன் ஒரு முடிவுக்கு வந்தான். எம்மா….வந்திருச்சிம்மா...என்று பொய் சொன்னான். வெளியில் ஆணும் பெண்ணும் ஒரே சிரிப்பு, கூப்பாடு, வந்திருச்சான்...வந்திருச்சான்.. என பரபரப்பான பேச்சு. ஒரு மாதிரியாக எல்லாத்தையும் முடித்து அவன் கழிப்பறையை விட்டு வெளியேறினான். அந்த நிகழ்விற்குப்பின் அவன், இனி கழிப்பறைப் பக்கமே செல்லக்கூடாது என கழிப்பறைக்குள்ளே முடிவெடுத்தான்.
அவன் மனைவி, கைபேசியில் பேசும் சத்தம் கேட்டது. “ சரி...நான் அவரிடம் சொல்றேன்….” என்றாள். நாராயணன் தான் பேசுவது. அவன் சொன்னான் என்றால் சரியாக இருப்பான். நாரயணனுக்கு இவன் மேல் ஒரு அலாதியான மரியாதை உண்டு. சரியான நேரத்தில் எல்லா வேலைகளையும் முடித்தாக வேண்டும். காலையில் எல்லா செடிகளுக்கும் தண்ணீர் எடுத்து ஊத்திவிட்டு, நாளிதழ்களை லேசாக புரட்டி விட்டு, அதன்பின், குளித்து மார்க்கெட்டுக்கு போயிட்டு வந்தால், சரியாக நாராயணனை சந்தித்து விடலாம். அதன்பின் அவனிடமிருந்து பணம்  வந்தாகிவிடும்.  பின் வங்கிக்கு சென்று இருக்கிற பணத்தையும், நாராயணனிடமிருந்து வந்த நாற்பதாயிரத்தையும் சேர்த்து சின்னவளுக்கு காலேஜிக்கு பீஸ் கட்டி விடலாம். முதலில் யார் வீட்டுக்கு வந்திருந்தாலும் அவர்களிடம் பேசிச்சமாளித்து அவர்களை அனுப்ப வேண்டும். அதன் பின் கைபேசியில் பேசியவரிடம் பேசி அந்த வேலையை முடித்தாக வேண்டும்.  இவ்வளவு வேலைகள் இருக்கிறது.  கழிப்பறைக் கதவை தட்டும் சத்தம் கேட்டது.  “யாரு? யாருங்கிறால்லா…”.  “ ம்ம்… நான்தான்.” அவன் மனைவிதான் பேசியது. “ என்ன சொல்லித்தொலை. நான்தான் வெளியில் வருவேன்லா… அதுக்குள்ள என்ன அவசரம்…” “நானா அவசரப்படுறேன். உங்க நண்பர்  நாராயணன்தான் பேசினார்…” “அதா...இப்ப வந்து கிளம்பனும்லா…. அதுக்குள்ள என்ன உனக்கு என்ன அவசரம். “  நான் சொல்றத கொஞ்சம் கேளுங்களேன்….ன்..ன்… கூப்பாடு போட்டாள்.  அவள் கூப்பாட்டில் சப்த நாடியும் அடங்கிவிட்டது. எல்லாம் அடங்கி போனால், அப்புறம் மலத்துவாரமும்தான் அடைத்துக்கொண்டது. அவன் மனைவி பேச ஆரம்பித்தாள்.  “ நாராயணன் உங்களை வர வேண்டாம் என சொல்லிவிட்டார்.. இப்பம் ஏதோ சூழ்நிலை சரியில்லையாம்..” என்றுதான் சொல்லியிருப்பாள்.. அவன் அதிர்ந்து போனான். முகமெல்லாம் வியர்த்து விட்டது.  கழிப்பறையே தாங்க முடியாத உஷ்ணமாயிருந்தது. சரி..வெளிய வாங்க.. ஏங்க உங்களத்தானே… சத்தத்தோடு கதவை டம்..டம்..என கதவை தட்டினாள்.   அவனுக்கு எந்த சத்தமும் முதலில் காதில் விழவில்லை. அதன்பின்தான் நிதானத்துக்கு வந்தான். ஆனால், இன்னமும் காலைக்கடன் கழிந்த பாடில்லையே. இதற்கு மேல் வரவும் வராது.  இவ்வளவு நேரம் கழிப்பறையில் உட்கார்ந்திருந்தது கால்கள் மதமதப்பானதுதான் மிச்சம். கால் கழுவி விட்டு, கழிப்பறையிலிருந்து வந்தான். பின் வாசல்படியில் அவன் மனைவி அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு  உட்கார்ந்திருந்தாள். சுவர் ஓரமாக அவளைக் கடந்து சென்றான்.  வயிறு மொந்து மொந்தென்றுதான் இருந்தது.  எதுவும் அவனுக்கு ஓடவில்லை. பணத்திற்கு வேறு ஏற்பாடு செய்தாக வேண்டும். “ கலேஜிக்கு பீஸ் கட்ட நாளைக்குதானே கடைசித்தேதி…..” என்று அவனாகவே பேசிக்கொண்டு, வெளியே வந்தான்.  வெளியில் சுள்ளென்று வெயில் அடிக்க ஆரம்பமாயிருந்தது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


                                                                                                                                                                         நன்றி
                                               காணிநிலம்/ டிசம்பர்,2019
                      

Comments

Popular posts from this blog

துர்ஷினியின் பிரவேசம் (இது ஒரு ஆன்ட்ராய்டு கதை)