இணக்கம்



இணக்கம் 
                                                                                          சாரதி
    சாந்தாவுக்கு திருமணம் உறுதியாகிவிட்டது. அவள் அம்மா அதற்காக வேண்டாத தெய்வமில்லை. போகாத கோயில் இல்லை. சாந்தா பல நேரம் வயிற்று வலி, ரத்தப்போக்குன்னு வீட்டில் முடங்கி விடுவாள். சிலசமயம் கண்முழி மேலேறிக்கொண்டு மயங்கியே விழுந்து விடுவாள். இது விசயமாக கைப்பக்குவத்திலிருந்து, நல்ல லேடி டாக்டர் வரைக்கும் பார்த்தாகிவிட்டது.  எல்லாரும் சொன்ன ஒரே பதில் அவளுக்கு கல்யாணம் முடிந்தால் எல்லாம் சரியாகிவிடும். அதைத்தான் அவள் பாட்டியும்  சொன்னாள். சாந்தாவிற்கு திருமணமானால் தாம்பத்யத்தில் வயிறு வலி, ரத்தப்போக்கு, தீட்டு எல்லாம் சரியாகி விடும் என்று அவள்  குடும்பமே முடிவெடுத்தது.
  சாந்தாவின் திருமணத்திற்கான ஏற்பாடுகளெல்லாம் விறுவிறுப்பானது. அன்றைக்குத்தான் திருமணம். ஆனால், அன்று காலையிலிருந்தே சாந்தாவுக்கு காய்ச்சல்,  பயம்,  பதட்டம்.  அவள் அம்மா, பாட்டி, வேணி அக்கா, சிநேகிதி கல்பனா எல்லாருமே அவளருகிலிருந்து பயத்தையும் பதட்டத்தையும் போக்க பேசி தைரியமாக்கி கொண்டேயிருந்தார்கள்.  ஆனாலும் சாந்தாவுக்கு கிறக்கமாகத்தான் இருந்தது.  சாந்தா தனக்கு ஒருவேளை இன்று பிரியட்ஸ் வந்து விட்டால் என்ன செய்வது? என்றே அவள் முகத்தில் பயத்துடன் யோசனை ஓடியது. அதை அவள் அம்மாவிடம் கேட்டே விட்டாள்.  “தரித்திரியம் பிடித்த மாதிரி்  யோசிக்காத மூதேவி.”  என்றாள் அவள் அம்மா.  ஆனாலும் திருமணத்திற்கான சம்பிரதாயங்கள் நடக்கும் போதே அவளுக்கு பிரியட்ஸ் வந்து விட்டது.  ஆனால் சாந்தா வெளியில் யாரிடமும் சொல்லவேயில்லை. அவள் வந்த வரத்த பார்த்ததுமே அவள் அம்மா புரிந்து கொண்டாள். சாந்தாவை எப்படியோ வெளியே கூட்டிப் போனாள். என்னன்னவோ செய்தாள். ஒரு மாதிரியாக அவள் அம்மா எல்லாவற்றையும் சரி செய்தாள். அதன்பின்தான் சாந்தாவும் ஒரு நிலைக்கு வந்தாள்.   
 சாந்தா சிறு வயதிலிருந்தே பலகீனமானவள்.  அவள் வளர்ந்து ருதுவான பின் முதலில் உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்றாற் போல் மூன்று மாதத்திற்கு ஒரு முறை தீட்டு ஒழுங்குடன்தான் இருந்தது. காலம் போகப்போக போதுமான போசாக்குகள் இல்லையோ… என்னவோ.. தீட்டு ஒழுங்கில்லாமல் மாறிவிட்டது.    அவள் அம்மா “எங்க காலத்தில் தீ்ட்டெல்லாம் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. உலக்கையை சுத்தி போட்டு உக்காந்திருப்போம். அவ்வளவுதான். இப்படி பாடா படுத்த மாட்டோம்.” என்பாள். சாந்தாவுக்கு அவள் அம்மா சொல்வது எதுவும் புரியவே புரியவில்லை. அவள் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். ஒரு நாள் பள்ளிக்கூடத்தில் வைத்து தாங்க முடியாத வியிற்று வலியில் கடுமையான ரத்தப்போக்கு, அதுவும் கட்டிகட்டியாக ரத்தம் வந்ததால், மயங்கி விழுந்தாள். எல்லாரும் பயந்து விட்டார்கள். அந்த நேரத்தில் சுந்தரி டீச்சர்தான் அவளை ஆதரவுடனும் பரிவுடனும் அம்மா போல் காப்பாத்தினார். அதற்குப்பின், மாதம்மாதம் பிரியட்ஸ் வரும் காலத்தில் வகுப்பறையிலேயே மயங்கி வழுந்து விடுவோம் என்ற எண்ணத்தில், அந்த காலங்களில் பள்ளிக்கு போகிறதே இல்லை.  ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பு முழுப்பரீச்சை நேரத்தில், அதுவும் முதல் பரீட்சை அன்று பரீட்சை அறையிலே கடுமையான ரத்தப்போக்குடன் மயங்கி விழுந்தாள். நல்ல வேளையாக, அவள் சுந்தரி டீச்சருக்கு இவள் நிலைமை தெரியும் என்பதால்,  அவளை சரி செய்ய எல்லா ஏற்பாடுகளும் செய்து, பவோண்டோ சாப்பிட வைத்து, பின் எப்படியோ பரீட்சையும் எழுதி தேர்ச்சியும் பெற்றாள்.  
அதன் பின், அவள்  ஒரு பிரைவேட் கம்பெனியில் வேலைக்கு சென்று கொண்டிருந்தாள். வெயிலும் மழையும் பல நேரம் அவள் இயற்கை உபாதைகளுக்கு சிரமத்தைதான் கொடுத்தது.   வயிறு வலி, தீட்டுக்கான காலமும் மாறிமாறி வந்ததால், அவளால் உடல் உபாதைகளை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அந்த நேரத்தில் என்னவெல்லாமோ செய்து சமாளித்துப்பார்த்து, முடியாமல் அவள் கம்பெனிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிலே இருந்து விடுவாள். ஒவ்வொரு மாதமும் இப்படியே ஆகிவிடும்.  சில நேரம் கம்பெனி முதலாளி கோபப்பட்டு, “மாதம் மாதம் முக்கியமான வேலை நேரத்திலெல்லாம், உனக்கு இதே எழவாப்போச்சு.” ரொம்ப கேவலமாகப் பேசுவார்.  அப்பொழுதெல்லாம், சாந்தாவால் அவமானத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் விக்கி விக்கி அன்று முழுவதும் அழுவாள். அந்த நேரத்திலெல்லாம் அவள் சிநேகிதி கல்பனாதான் சாந்தாவை சமாதனப்படுத்தினாள். கல்பனா முதலில் இவளுடன்தான் வேலை செய்து கொண்டிருந்தாள். அதன்பின்தான்  நீதிமன்றத்தில் தட்டச்சுப் பணி கிடைத்தது. அவள் கோர்ட்டில் விசாரணை நடைபெறும் போது, அதை உடனுக்குடன் டைப் அடிக்கிற பணி.  கோர்ட்டில் லீவ் கிடைப்பது என்பதெல்லாம் முடியாத காரியம். அவளுக்கு முடியாத அந்த மூன்று நாளும் தன் வேலையை பாதுகாத்துக்கொள்ள வேறு வழியில்லாமல், என்னநிலையில் இருந்தாலும் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு பணிசெய்வாள். அப்படி ஒருதடவை பணிசெய்கிற அந்த நேரத்தில், விசாரணையை டைப் செய்யும் போது ரத்தப்போக்கு அதிகமாகி வலி உச்சத்துக்கு சென்று, மயங்கியே விழுந்து விட்டாளாம். அந்த நேரத்தில் நீதிபதி நீதியைக்காப்பாற்ற நீதிமன்றத்தில் டேபிளின் மேல் விழுந்த அவளை,  கோபத்தில் உரத்த சத்தத்தில் அவள் முத்தில் தண்ணீர் அடிக்க சொல்லி, டைப் அடி என்றாராம். எந்த மனிதாபிமானமில்லாமல், ஒரு பெண் என்று கூட பாராமல் அத்தனை பேர் மத்தியில் கல்பனாவை சித்திரவதை படுத்தினார். ஒரு நீதிமன்றத்திலேயே இப்படி நடக்கிறது என்றால், எந்த நியாயத்தை எங்கே கேட்பது.  இந்த விசயத்தை சொல்லிதான் கல்பனா, சாந்தாவை சமாதானப்படுத்துவாள். சாந்தா, அவள் சிநேகிதிக்கு தன்னை விட, எப்படி எவ்வளவு மோசமான நிலைமை என்பதை புரிந்து கொண்டு சமாதானமாவாள். காலம் போகப்போக எல்லாம் சரியாகிவிடும் என்று அவள் அம்மா சொன்னாள்.   
சாந்தாவின் குடும்பத்தார் நினைத்த மாதிரியே திருமணம் இனிதே நடந்தேறியது.  நேரம் காலம் பார்த்துத்தான் சாந்தி முகூர்த்த ஏற்பாடுகளும் நடைபெற்றது.  மாப்பிள்ளை நல்லவராகத்தான் தெரிகிறது என்றும், அவரிடம் பார்த்து பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அவள் அம்மா  அவளுக்கு அறிவுரை சொன்னாள்.   அதற்குப்பின்தான் எப்படி சமாளிப்பது என்றே புரியாமல், பயந்து தவித்தாள்.  மாப்பிள்ளையும், பொண்ணையும் உட்கார வைத்து, சாந்தி முகூர்த்த சம்பிரதாயங்களை பெரியவர்கள் நடத்தினார்கள்.  நேரம் ஆகஆக அவளுக்கு ரத்தக்கசிவு அதிகமானது.   காலையில் அடித்தவெயிலின் புழுக்கம் வேறு தாங்க முடியவில்லை. அவளுக்கு கிறக்கம் நின்றதாகத் தெரியவில்லை.  சாந்தாவும் அவள் கணவரும் தனியே விடப்பட்டார்கள். அவள் என்னதான் செய்வாள்.  கை காலெல்லாம் படபடவென அடித்தது.  அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அம்மா சாதாரணமாக சொல்லி விட்டாள். அவளுக்கென்ன தெரியும் என்னுடைய நிலைமை. அவரிடம் போய் எனக்கு வந்து பாருங்க.. பிரியட்ஸ் வந்திருச்சி.. அதனால இன்னைக்கு நமக்குள்ள எதுவும் வைத்துக் கொள்ள வேண்டாம். எப்படி இதை அவரிடம் சொல்வது. அவளுடன் வேலை செய்யும் வேணி அக்கா சொன்னது ஞாபகம் வந்தது. திருமணம் நடந்த பிறகு, சாந்திமுகூர்த்த அன்றைக்கு ஆண்கள் எல்லாம் யாரிடமாவது எதையாவது கேட்டுக்கொண்டு, தன் முழுத்திறமையை காண்பித்துக்கொள்ள வேகவேகமாக வருவார்கள். நீதான் பார்த்து பக்குவமாக நடந்து கொள்ளவேண்டும். அவர்களை அடக்குவதும், ஆள்வதும் நம் கையில்தான் உள்ளது என்று சொன்ன அறிவுரை. என்னதான் ஆண்கள் பேசினாலும், சுற்றிச்சுற்றி அங்குதான் வந்து நிற்பார்கள்.  இவர் எப்படியோ? தெரியவில்லை. அம்மா அவரை ரொம்ப நல்ல ஆளுதான் என்றும் சொன்னா புரிந்து கொள்வார் என்றும் சொல்லிவிட்டு போய் விட்டாள். இப்படி பட்ட சூழ்நிலையில் அவரிடம் தனது அந்தரங்க விசயத்தை எப்படி சொல்வது?  அவர் ஏதாவது பேசினால் கூட அவரிடம் ஒரு வேளை, இப்படி..இப்படி..எனக்கு வந்திருக்கு, நீங்க கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க…. என சொல்லலாம். ஒரு வேளை அவரும் ஆசைஆசையா நிறைய கற்பனையோடு வந்திருந்து, நான் அவரிடம் இதைப்பற்றிச் சொல்ல, படக்கென்று அவர் கோபித்துக்கொண்டு வெளியே சென்று விட்டால், நேரம் காலம் பார்த்து, அதுவும் பொண்ணுக்கு பிரியட்ஸ் விசயமாக கேட்டு உறுதி பண்ணிய பிறகுதான் கல்யாண தேதியை குறித்தோம். சாந்திமுகூர்த்தமும் நேரம் பார்த்துதானே உறுதி செய்தோம்.. என வீட்டில் உள்ள பெரியவர்கள் எல்லாம் கேட்டுவிட்டால்,  அய்யய்யோ…..நாமதான் கேவலப்பட்டு நிற்கவேண்டும். அம்மா வந்து எல்லாம் பேசிச் சமாளிப்பாள். அப்புறம் அவள் என்னிடம் வந்து கேவலமாக்கி விட்டதாக  அழுது ஏசுவாள்.  இப்படி அவளுக்கு பல்வேறு எண்ணங்கள் ஓடியது.  அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது.  ச்சே… பொம்பிளப்பிள்ளையா பிறக்கவே கூடாது…  என வேதனையில் புலம்பினாள்.
 இந்த அம்மா பாரு என்னை தனியாக விட்டு விட்டு நழுவி விட்டாளே?.  இந்த மாதிரியான சூழ்நிலை அவளுக்கு புதிது.  அவன் அருகில் வந்து அவளை தொடும் போது, ஒரு ஆண் தன்னை புதிதாகத் தொடும் போது வரும் பயம் வேறு,  ஏற்கனவே உள்ள ரத்தப்போக்கிற்கான பயம் வேறு. அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவள் கணவன் அவளுக்கு புதியவன் என்பதால் பேசுவதற்கு முதலில் பயந்தாள். அவனும் முதலில் பேசுவதற்கு யோசித்தான். எப்படினாலும் பேசித்தான் ஆக வேண்டும். அவர் பேசினான் என்றால், எப்படியாவது தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பேசி விடவேண்டியதுதான் என முடிவெடுத்தாள். அவன் எப்படி என்ன மாதிரி இருக்கிறான்?  தலையை குனிந்தும் குனியாமலும் பார்த்தாள். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. குலதெய்வத்தை நினைத்து விசயத்தை சொல்லிவிட வேண்டியதான்.  குலதெய்வம் சுடலைதானே. அம்மா அடிக்கடி அங்குதான் போய் வேண்டிக்கொண்டாள். முதல்முதலில் அவரிடம் இதைப்பற்றி எப்படி சொல்வது. பொம்பிளசாமின்னா கூட கூசாமல் பேசலாம்.  இது ஆம்பிளசாமி. அம்மா எப்படித்தான்  இதையெல்லாம் சுடலையிடம் வேண்டுகிறாளோ? தெரியவில்லை. இந்த நேரத்தில் வேறு யாரிடமும் இதைப்பத்தி பேச முடியாது. சுடலைச்சாமியிடம் தனியா வேண்டிக்கிறது  இதுதான் முதல்தடவை. சுடலைக்குதான் இதைப்பத்தி நல்லாவே தெரியும். அம்மா எத்தனையோ தடவை சுடலையிடம் சொல்லியிருக்கிறாள்.  பிறகு எதுக்கு எல்லாத்தையும் சொல்லிக்கிட்டு. சுடலைசாமி மேல பாரத்தை போட்டு விட்டு அவரிடம் சொல்லிட வேண்டியதுதான் என முடிவெடுத்தாள். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, சுடலை மேல பாரத்தைப்போட்டு விட்டு, அவரிடம் பேச வார்த்தைகளை தேடினாள்.  சாந்தா ஏதோ பேச வருகிறாள், ஆனால் தடுமாறுகிறாள் எபைதை புரிந்து கொண்டு, அவரே என்ன என்பது போல், அவளைப்பார்த்தான். அவளுடைய வாயசைவும், கண் அசைவும் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அதற்குள் அவன் தயாராகிவிட்டான். அவன் அவள் அருகில் நெருங்கி வந்திருந்தான்.  அவளிடம் அவன் இன்னும் அதிகமாக நெருங்கி வந்தான். அவரின் நெருக்கத்தால், அவள் வார்த்தைகளும், கண் அசைவும் அப்படியே நின்றது.  அவள் தோளைத் தொட்டான்.  அவளுக்கு எல்லாம் மறந்து போனது.  அவனுக்கும், அவளுக்கும் அந்த தொடுதலே புதுஅனுபவம். தலை முதல் கால்வரை ஜிவ்வென்றிருந்தது. அவள் அவனை ஏறிட்டுப்பார்த்தாள். ஒரு பதட்டத்துடன், வார்த்தைகளற்ற உதட்டசைவில் இருப்பதை அவன் பார்த்தான். அவன் எதுவுமே பேசாமல் அவளை அணைக்க எத்தனித்த போது, அவள் படக்கென பயம் கலந்த உணர்வோடு அவனை அணைத்துக்கொண்டாள். அவளின் பயமும், பதட்டமும் அவள் கைகளிலும், உடம்பிலும் தெரிந்தது. என்னவெல்லாமோ  அவளுக்கு தோன்றியது.  அவளுக்கு பயம் அதிகமானது. பயம் அதிகமாகி அதிகமாகி முடிவில் அழுகையில் போய் முடிந்தது. அவள் என்னவெல்லாமோ நினைத்து அழுதாள். அவனிடம் எல்லாவற்றையும் கொட்டி தீர்க்க வேண்டும் என நினைத்து அழுதாள். அவள் தீராத அழுகையாக அழுதாள். அவனை அணைத்திருந்த  அவள் கைகள் விடவேயில்லை. அவள் விம்மி விம்மி அழுதாள்.  அவன் பயந்து விட்டான். ஆனாலும் அந்த அணைப்பு அவனுக்கு தேவையாகக் கூட இருந்தது.  என்னவென்று  அவனுக்கு ஒன்றுமே புரியவேயில்லை. அவன் கையால் அவள் முதுகை தட்டிக்கொடுத்தான். இவ்வளவு நெருக்கம் என்னமோ செய்தது.  ஆனாலும் இது தேவையாக இருந்தது. அவன் இதயத்தோடு இதயமாக  அவள் பேசியது போல் உணர்ந்தாள். அவள் உதடுகள் ஏதோ முணுமுணுத்தது. அவன் அவளை இன்னும் நெருக்கமாக அணைத்தான்.  அவள் உதடுகளின் முணுமுணுப்பும் நின்றது. அவர்கள் ஒருவரை ஒருவர் நீண்ட காலம் புரிந்தது போல், அவர்கள் இருவரின் அணைப்பும் இருந்தது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&




Comments

Popular posts from this blog

துர்ஷினியின் பிரவேசம் (இது ஒரு ஆன்ட்ராய்டு கதை)

அவனின் கழிவறை