யாசகம்



  
யாசகம்                   சாரதி 
             அவன் நல்லசிவன் வீட்டு காம்பவுண்ட்டில் நின்றிருந்தான். கீழிருந்து மாடியைப் பார்த்தான். மாடியில் ஆள் நடமாட்டம் தெரிந்தது.  காம்பவுண்ட் கதவின் முன் நின்று வீட்டுக்குள் பார்த்தான். வீட்டைச்சுற்றி குரோட்டன்ஸ் செடிகளும், தாள்ப்பூ செடிகளும் இருந்தது. ஒரு நிமிடம் தயங்கினான். காம்பவுண்ட் கதவை திறந்து கொண்டு நல்லசிவன் பெயரைச் சொல்லி அழைத்தான். அவன் அழைப்பு நிச்சயம் கேட்டிருக்காது. அவனுக்கு சத்தமான குரலில் அழைப்பதற்கான எந்த தெம்பும் உடம்பில் இல்லை.  நல்லசிவன் வீட்டுக்குள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை. அது நல்லசிவன் வீடுதான் என்ற உரிமையோடு அந்த வீட்டின் மாடிப்படியில் ஏறியபடியே, மறுபடியும் நல்லசிவன்.....என உயிரைப் பிடித்துக் கொண்டு சத்தமாக அழைத்தான்.  இந்தமுறை அவன் அழைப்பு கேட்டிருக்க வேண்டும்.  “அவங்க ஆபீஸ் முடிந்து பஜாருக்கு போயிட்டுதான் வருவாங்க….” அவன் மனைவி வனஜா குரல் மாதிரிதான் இருந்தது. ஆம்… அவளே தான்.  இவனைப் பார்த்ததும் சற்று தயங்கி, பயந்து நின்றாள். அதன்பின் “வாங்க…” என்றாள்.  அவள் அழைப்பில் சுரத்து இல்லை.  அவனைப் இப்படி பார்த்தது… அவளுக்குள் ஏதோ பிடிக்காமல் இருந்தது. அவன் சரியாக வாராத தலையுடன், ஒரு அழுக்கடைந்த பேண்ட், சாயம்போன கசங்கிய சட்டையுடன் இருந்தான். வனஜா நேர்த்தியான ஆடையில், சிகை அலங்காரத்துடன் பார்ப்பதற்கு அழகாக இருந்தாள். நல்லசிவனும் வனஜாவுக்கு ஏற்றாற்போல், சரியான வண்ணப் பேண்ட் சர்ட்டில் அழகுடன் இருப்பான். நல்லசிவன் அழகும், நல்ல அரசுப்பணியும்தான் அவர்கள் திருமணத்தை சடாரென்று முடிவுக்கு கொண்டு வந்தது. இவன் மாடியின் மேல் படியில் நின்றிருந்தான். அவள், நல்லசிவன் வருகையை எதிர்பார்த்து அலங்காரத்தேராய் மாடி வீட்டு வாசலில் நின்றிருந்தாள்.
மாடியில் வராண்டா சுத்தமாக இருந்தது. ஆனாலும், வலது மூலையில் ஒரு எட்டுக்கால் பூச்சி ஒரு நூலில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது. அது சிலந்திவலை கட்டுவதற்கான தோதுவை கணித்துக் கொண்டிருந்தது. அவளுக்கு இவனைப் பார்த்ததிலிருந்தே ஏதோ அசூயையாய், அவன் இருப்பே மனதிற்குள் ஒரு நெருடலாக இருந்தது.  அவனை இதற்கு முன்பு நல்லசிவனுடன் பல தடவை பார்த்திருக்கிறாள். அப்போதெல்லாம் அவன் இப்படியில்லை. ஏதோ பார்க்கும் படியாவது இருந்தான்.  நல்லசிவன், அவன் நண்பர்களையெல்லாம் அறிமுகப்படுத்தும் போது, இவனையும் அறிமுகப் படுத்தியிருக்கிறான். அப்போது இவனின் அறிமுகத்தையும், இருப்பையும் அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவேயில்லை. இவன் சரியான வேலைக்காக தேடியலைந்தான். எந்த வேலையிலும் அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஊர் ஊராய் சுற்றினான்.  கிடைத்த வேலையை செய்தான். காலமும் வயதும் அவன் கனவை சிதைத்தது.  எப்படியாவது அவனை திருப்பி அனுப்பி விட வேண்டும் என முடிவு செய்தாள். அவன் ஓரிரு வார்த்தைகளில் அவளையும் நல்லசிவனையும் குசலம் விசாரித்தான். அவள் தலை மட்டும் தான் இசைவை தெரிவித்தது.   அவள் யோசனையில் இருந்தாள். அவள் ஒரு கண் புருவம் மேல் நோக்கி ஏறியும், மறு கண் புருவம் கீழ் நோக்கியும் சுழித்துக்கொண்டிருந்தது. கோழி முட்டை மாதிரியான அழகு கருவிழிகள், கண்களிள் இடது பக்கங்களின் ஓரத்தில் பதுங்கியிருந்தது. அவள் வாயிலிருந்து வார்த்தைகள், பாம்பின் நாக்கென வந்து விழுந்தன.  “…..அவர் வர நேரமாகுமே…” என்றாள். அவளிடமிருந்து சட்டென அப்படியொரு வார்த்தையை அவன் எதிர்பார்க்கவே இல்லை. அவனுக்கு என்னவோ போலிருந்தது.  இவன் மாடிப் படியிலேயே நின்றிருந்தான். இவள் தன்னைப்பற்றி தெரிந்து பேசுகிறாளா? அல்லது உண்மையிலேயே தெரியவில்லையா.?. சற்று குழம்பினான். மறுபடியும் அவள் முகத்தைப்பார்த்தான்.  அவள் அவனை வா..என்று கூப்பிடவும் இல்லை.  போ..என்று சொல்லவும் இல்லை. அவனுக்கு தர்ம சங்கடமான நிலையாயிருந்தது.
அவள் மாடி வாசலில் நின்றபடியே தெருவைப்பார்த்தாள். இன்னும் இருட்டவில்லை. வெயில்கால மாலைப் புழுக்கம் ஆரம்பமாகியிருந்தது. நல்லசிவன் ஏன் இன்னும் வராமல் இருக்கிறான். ச்சே.. என்றிருந்தது.  வராண்டாவிலிருந்த எட்டுக்கால் பூச்சி சிலந்தி வலையை பின்ன தோதுவாக தென் மூலையில் நின்றிருந்தது. அவள் மனம் படபடவென அடித்துக் கொண்டது. தன்னைப்பற்றிய அழகு, கூச்சம், நாணம், பயம் அவளுக்குள் ஏதேதோ எண்ணங்கள் ஓடியது.  இவனுக்கு முகம் வியர்த்து விட்டது.  இரண்டு நாள் சாப்பிடாத பசிக்கிறக்கம் வேறு.  கொஞ்சம் தயங்கி தயங்கி அவளிடம், நல்லசிவனுடன் தனக்கான நட்பைப் பற்றி பேசி, பேச்சுக் கொடுத்தான். ஆனால், அவள் எதையும் கேட்டதாகத் தெரியவில்லை. அவளும் பேசவில்லை. அவள் குனிந்த தலை நிமிரவேயில்லை. இவனுக்கு பசி வேறு தாங்கவும் முடியவில்லை. வெயிலும் இல்லாமல் இருட்டும் இல்லாமல், தாங்கமுடியாத புழுக்கமாயிருந்தது.  நல்லசிவனும் வருவதாக தெரியவில்லை. என்னதான் செய்வது என்று யோசித்தான். வாழ்க்கை அவனை தலைகீழாக கட்டி வைத்து சவுக்கையால் சரமாரியாக அடித்தது போலிருந்தது. நல்லசிவன் வந்து தன்னை காப்பாற்ற மாட்டானா.. என பரிதவித்தான்.  வெளியில் எந்த அசைவுமற்று இருந்தது. அவளைப் பார்த்தான். அவளும் அப்படியே நின்றிருந்தாள்.  அந்த எட்டுக்கால் பூச்சி நூலின் மறு முனைக்கு சென்று வலை பின்ன ஆரம்பித்தது. அவன் ஒரு முடிவெடுத்தான். சரி….நல்லசிவன் மனைவிதானே அவள். அவளிடம் உரிமையோடு பசிக்கிறது சாப்பாடு ஏதாவது வேணும்……...என்றால் சாப்பாடு இல்லை என்றா… அவள் சொல்லப்போகிறாள். அவளும் என் தாயைப்போல பெண்தானே. இரக்கம் இல்லாமலா போகப்போகிறாள். “சாப்பிட ஏதாவது இருக்கா...பசிக்கிறது..”  அவளிடம் திக்கித்திணறி கேட்டே விட்டான். அவள் ஒரு நிமிடம் பயந்திருந்தாள். அவள் கண்கள் அங்கும் இங்கும் நிலை தடுமாறியது. அவள் கை விரல்கள் பதட்டத்தில் நடுங்கியது.  இப்போதாவது நல்லசிவன் வரமாட்டானா…. அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இனி அவனை நம்பி பயனில்லை, நிலைமையை சமாளிக்க முடிவுவெடுத்தாள்.
வந்தவனிடம் இப்படி சொல்வது சரியா? என்று கூட அவள் யோசிக்க வில்லை. “இன்று வீட்டில் சோறே பொங்கவில்லை…..வெளியில்தான் சாப்பிட்டோம்” என்றாள். அவள் வார்த்தையில் தடுமாற்றம் தெரிந்தது. அவள் அவன் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தாள். அவன் முகத்தில் குழிக்குள்ளிருந்த கண்கள் ஒரு முறை வெளி வந்து உள் சென்றது.  அவனுக்கு பசி மயக்கத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவள் என்ன சொன்னாள் என்பதும் அரை குரையாய் அவன் காதில் விழுந்தது.  மாடிப்படியில் நிற்க முடியாமல் அவன் கால்கள் நடுங்கியது.  அவன் கண்ணைக் கட்டியது. அவனால் யோசித்து எதுவும் பேசமுடியவில்லை.  ஆனாலும் பேசினான்.. “……அதனால் என்ன? நேத்திக்கு உள்ள பழைய சோறும், ஊறுகாயும் இருந்தால் போதும்மா... அதுதான் இப்போது எனக்கு வேணும்மா ” என்றான். அவன் சாதாரணமாகத்தான் சொன்னான். சத்தமாகக் கூட பேசவில்லை. அவளுக்கு திக்கென்று வியர்த்து விட்டது. அவள் சேலைத்தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள் இப்படிப்பட்ட நண்பர்களை, எங்கிருந்துதான் தேர்ந்தெடுத்தானோ இந்த நல்லசிவன். அவளுக்கு எரிச்சலும் கோபமும், அழுகையுமாய் வந்தது. ரொம்ப நேரத்துக்குப் பிறகு அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்தாள். அவன் முகம் பாவமாகத் தெரிந்தது.  அவள் மனது எந்த வகையிலும் ஒவ்வாமல் இருந்தாலும், வேறு வழியில்லாமல் நேற்றைக்கு பொங்கிய சோறு பானையில் எவ்வளவு இருக்கும் எனப் பார்த்தாள். ஐந்தாறு குத்துச்சோறு இருந்தது.  இருந்த சோற்றையும் ஊறுகாயும் ஒரு தட்டில் எடுத்து நடுக்கட்டில் வைத்து விட்டு, அவனை “உள்ளே வாங்க...என்றாள். வரண்டாவின் மேல் மூலையைப்பார்த்தான். எட்டுக்கால் பூச்சி வலைப்பின்னலின் சூட்சமத்தில் தகித்திருந்தது. அவன் பைய நடந்து நடுக்கட்டிற்கு சென்றான். அவன் நடையில் அதிகமான சோர்வு தெரிந்தது. அந்த விஸ்தாரமான அறையை சுற்றிச்சுற்றிப் பார்த்தான். அந்த அறையில் ஐஸ் கிரீம் கலர் வண்ணச் சுவரை ஒட்டியும் ஒட்டமாலும் மர வேலைப்பாடான வெல்வெட் துணியாலான ஒரு சோபா, அங்கங்கே அழகிய பூச்சாடிகள், பெரிய டி.வி, சுவரின் எட்டமுடியாத உயரத்தில் நல்லசிவனும் அவன் மனைவியும் எடுத்துக்கொண்ட அழகிய பெரிய போட்டோ, வந்தவர்களை அந்த அழகிய முகங்களால் டீசன்டாக வாருங்கள்...என கூப்பிடுவது போலிருந்தது. அந்த சுத்தமான அறையின் நடுவில் டைல்ஸ் தரையில், ஒரு தட்டு பழையசோறும் ஊறுகாயும் வைக்கப்பட்டிருந்தது, எந்த வகையிலும் தொடர்பில்லாமல் இருந்தது. இவன் கவனமாக நிதானமாக சாப்பாட்டுத்தட்டின் முன் உட்கார்ந்தான். சாப்பிடும் போது ஒரு ஒழுங்குடன் ஒரு பருக்கைச்சோறு கூட சிந்தாமல் சாப்பிட வேண்டும் என முடிவெடுத்தான்.  நல்லசிவன் மனைவி சோற்றை வைத்ததும், அங்கிருந்து சென்றதும் நிமிடத்தில் நடந்து முடிந்தது. அவன் முதலில் கவனிக்கவில்லை. வீட்டில் எந்த சத்தமும் இல்லாமல் இருக்கிறது, என்பதை கணித்த பின்புதான், அவள் இல்லை என்பதை உணர்ந்தான். அப்படி அவள் சென்றது இவனுக்குள் நெறிஞ்சியாய் குத்தியது.  நல்லசிவன் வீட்டிலும் கூட இப்படி ஒரு அவமானமா…. அவன் கூனிக்குருகி உள்ளே இருந்தான். வெளியில் வானம் கடைசி வெளிச்சத்தில் இருந்தது. என்ன இருந்தாலும், அவனால் பசியை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவளும் என்ன செய்வாள். திருமணமாகி சிறிது காலம்தான் ஆகிறது.  புதிதாக தனியாக ஒரு ஆணுக்கு சாப்பாடு போடுவதெல்லாம் எப்படி சாத்தியம்?  கூச்சமாக கூட இருக்கலாம். அவள் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. வேறு யார் அவள்?  நல்லசிவன் மனைவிதானே அவள்… என்ற முடிவுக்கு வந்தான்.
அவன் கண் கலங்கிய நிலையில் சாப்பாட்டுத் தட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் இதற்கு முன்வரை பட்ட அவமானங்க ளெல்லாம் சோற்றுக்குள்ளிருந்து வேறுவேறு திசையில் அவனை வேடிக்கை பார்த்து சிரித்தன.  இங்கேயும் அவனை பராமரிக்க யாரும் இல்லை. அதை அவன் பெரிதாகவும் எடுத்துக் கொள்ளவுமில்லை. சாப்பிடுவதை நிறுத்தி விட்டு, சுற்றுமுற்றும் பார்த்தான். நல்லசிவன் வீடுதானே இது?  ஒரு நிமிடம் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.  மனதுக்குள் எங்கோ ஒரு அடிவிழுந்தது.
                                            சோற்றை வாயிக்குள் போட்டான்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               தொண்டைக் குழிக்குள்தான் சென்றிருக்கும். புரையேறி இருமல் வந்தது.  அவனே அவன் தலையை தட்டிக்கொண்டான். குடிக்க தண்ணீர் வைக்கப்படவில்லை. அடுப்படியில் தண்ணீரைத் தேடினான். வடிநீரில் தண்ணீரை பிடித்து, அவனே குடித்துக்கொண்டான். ஏதோ பேச எத்தனித்தான். யாரும் இல்லையோ...என தானாகவே சுதாரித்துக்கொண்டான். கீழ் வீட்டில் நல்லசிவன் மனைவி யாருடனோ பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. அமைதியாக ஒரு பருக்கைச்சோறு சிந்தாமல் சாப்பிட்டபின், வாஷ் பேசனில் தட்டை போட்டுவிட்டு கை கழுவினான். படியிறங்கி கீழ் தளத்திற்கு சென்று கொண்டிருந்தான். கீழ் வீட்டு வாசலில் வனஜா ஒரு பாட்டியுடன் பேசிக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் மேலே படிகளை  கவனித்தது. அவனை அவள் எதிர்பார்த்துதான் இருந்தாள்.  அவள் முன்நின்று, தனது நன்றியை கை கூப்பி தெரிவித்தான். அவன் கலங்கிய கண்கள், அவளை என்னமோ செய்தது.     “தான் வந்து போனதாக நல்லசிவத்திடம் சொல்லுங்கள்.” என்றான்.  அவளுடைய முகத்துக்குள்ளேயே வியர்த்தது. எங்கிருந்தோ வந்த காற்று அவர்களைத் தழுவியது. அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் இப்பொழுது ஒரு தெளிவு வந்து கொண்டிருந்தது.  அவள் எதுவும் பேசவில்லை.  அவள் கண்களில் கண்ணீர் கட்டி நின்றது. அவன் காம்பவுண்ட் வாசல் கதவை மூடி விட்டு வெளியேறினான்.  காம்பவுண்ட் வாசல் கதவை பூட்டும் “ணங்” என்ற சத்தம் அவள் காதில் இரைந்தது. அந்த சத்தம் என்னவோ சொல்லியது.  அவன் தெருவை நோக்கி, மங்கலான இருட்டுக்குள் சென்று கொண்டிருந்தான். தூரத்தில் நல்லசிவன் வந்து கொண்டிருந்தான்.  
                               0000000000000000000

ரொம்ப காலத்திற்கு பின், அவன் வனஜாவை மனைவி குழந்தைகளுடன்,  அவள் வீட்டில் வைத்து சந்தித்தான். இந்த முறை அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் விருந்து தடபுடலாய் நடந்தது. நல்லசிவன் வீடு சிரிப்பும், கும்மாளமும், கேலியும், கிணடலுமாய், வீடே தலைகீழாக இருந்தது. நல்லசிவன், அவன் மனைவி வனஜா, இவன் மனைவி, குழந்தைகள் எல்லோருமே வயிறு குலுங்க குலுங்கச் சிரித்தார்கள். வனஜா சிரித்துக்கொண்டே இவன் மனைவியிடம்                                                        “உங்க வீட்டுக்காரர் இப்பத்தான் சிரிக்காரு... முன்னாடியெல்லாம் அவரும்
 அவர் டிரஸ்ஸூம் பாக்கும் போது ஒரு மாதிரியாத்தான் இருப்பாரு… அப்படித்தான் ஒருநாள் எனக்கு கல்யாணம் முடிந்த புதுசு.. இப்பம் எப்படி இருக்காரு.. அப்படியா இருந்தாரு அன்னைக்கு. அவரு  வந்தத பாத்து  நான் கொஞ்சம் பயந்தே போயிட்டேன்… ஏ வீட்டுக்காரரு வேற இல்ல..மனுச சாப்பிடனும்னு ஒத்தக்கால்ல..நிக்காரு.. அன்னைக்கு சோறு வேற பொங்கல.. அவரு பழைய சோறாவது  வைங்கன்னு….நிக்காரு.. அப்பறம் என்ன செய்ய… சோத்த வைச்சுட்டு கீழ் வீட்டுக்கு ஓடிட்டேன்….
அப்படி சொல்லி சத்தமாக சிரித்தாள்.....நல்லசிவனும் சிரித்தான்.. இவனும் சிரித்தான். இவன் மனைவியும் சிரித்தாள்.  ஆனால், இவனுடைய சிரிப்பு முடியும் போது,  கண்களில் கண்ணீர் அடைத்து நின்றிருந்ததை, நல்லசிவன் மனைவி வனஜா கவனித்தாள். காலங்கள் எவ்வளவோ கடந்து விட்டன. கால மாற்றம் யாரைத்தான் விட்டு வைத்தது.   
00000000000000000000000000






Comments

Popular posts from this blog

துர்ஷினியின் பிரவேசம் (இது ஒரு ஆன்ட்ராய்டு கதை)

அவனின் கழிவறை