தெக்கூர் செல்லும் கருப்பு ரயில்வண்டி



அவர்கள் இரண்டு பேருக்கும் இப்படியொருநிலைமை இதற்கு முன் வந்ததில்லை. அவர்கள் ரயில்வே பிளாட்பாரத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். நான்கு ஜோடி ரயில் தண்டவாளங்களை கடந்த பின்புதான் அந்த ரயிலை அடைய முடியும். அது வடக்கூருக்கு போகும் ரயில். ரயில் செல்ல தயாரான நிலையில் இருந்தது. அந்த இருவரும் வேகவேகமாக நடந்தார்கள். முதுமையை மீற முடியாமலும், இடது கண் அறுவை சிகிச்சை பண்ணியதால், கண்ணில் கருப்புக்கண்ணாடியுடனும்அந்த தாய்அவன் கையை பிடித்து நடந்து வந்தார். அவர்களை கடந்து பலபேர்அவசரமாக சென்று கொண்டிருந்தனர். அக்கினி நட்சத்திரவெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. தண்டவாளங்களில் வெயில் பட்டு தெரித்து, அவர்கள் முகத்தில் அறைந்தது. அவள் கண்களில் பசி மயக்கம் தெரிந்தது. அடிக்கும் வெயிலையும் மீறி கையை நெற்றியில் கண்களுக்கு மறைப்பு கொடுத்து பார்த்தான். ரயில் பக்கத்தில்தான் தெரிந்தது. அவன் கை அம்மாவின்கையை இறுக்கியது.அதில் நம்பிக்கை தெரிந்தது.
ரயிலில் கூட்ட நெருக்கடி அவ்வளவாக இல்லை. அவர்கள் அமர்ந்திருந்தது ரயிலின் கடைசிப்பெட்டி. ரயில்வண்டி கிளம்ப ஆரம்பித்தது. தூரத்தில் கேட்ட இஞ்சின் சப்தம் பையப்பைய நகன்று கடக்..கடக்..என அவர்களை கடந்து சென்றது. மனது திக்.. ..திக்.. எனஅடித்துக்கொண்டது. அந்த பெட்டியில் அவர்களையும் சேர்த்து ஏழு பேர் இருந்தார்கள். மூன்று இளைஞர்கள்,ஒரு பெண், ஒரு கைக்குழந்தை. வெயில், நிழல், இரண்டையும் உள்ளடிக்கிதான் ரயில் நகன்றது.ஊருக்கு எப்படியும் போய் சேர்ந்தாக வேண்டும் என்பதில்; அனைவரும் உறுதியோடிருந்தார்கள். அனைவரின் முகமும் எந்த வெளிப்பாடும் இல்லாமல் பேயரைந்தாற் போலிருந்தது. கண்கள் மிரட்சியாய் இருந்தது. ரயில் நீண்ட வயல்வெளியை கடந்து கொண்டிருந்தது. கோரமான வெயிலில் பச்சை நெற்கதிரும் வெக்கையைத்தான் வெளியேற்றிக்கொண்டிருந்தது. மனிதர்கள் அவ்வளவாக கண்ணுக்கு தட்டுப்படவில்லை. சில மனிதர்கள் கொதிக்கும் வெயிலையும் மீறி வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அந்த ரயில் முழுவதும் அமைதியாக இருந்தது. டீ முறுக்கு, வடை வியாபாரிகள் சத்தம் கூட இல்லை. யாரும் ஒருவருக்கொருவர் அதிகமாகபேசிக்கொள்ளவில்லை. அவன் அம்மாவைத்தவிர அனைவருமே கருப்பு நிறம். சிவப்புநிறமான அந்த தாயின் முகத்திலுள்ள கருப்புக்கண்ணாடியும், செந்நிற நாமமும், அவள் அணிந்திருந்த நீள நிற ஆடையும்குறிப்பிட்ட பிரிவை சார்ந்தவர் என தனித்து காண்பித்தது. அவர்கள் இரண்டு பேரையும்,குறிப்பாக அந்த அம்மாவை பயந்த நிலையில் அனைவருமே பார்த்தார்கள்.அதுவே மயான அமைதியை ஏற்படுத்தியது.
அது பிரசித்த பெற்ற ஒரு கிராமத்து ரயில் சந்திப்பு நிலையம்.தெற்கூருக்கும் வடக்கூருக்குமான சந்திப்பு நிலையம். பொதுவாக எல்லா ரயில்களும் இங்கு நின்று பெட்டிகள் பிரிக்கப்பட்ட பின்பு வேறுவேறு திசையில் இஞ்சின்கள் இணைக்கப்பட்டு செல்வது வழக்கம். அதே போல்தான் இன்றும் கிழக்கு நோக்கி செல்லும் ரயிலில்சில பெட்டிகள்மாட்டப்பட்டும்,தெற்கூருக்கு செல்லும் ரயிலில் சில பெட்டிகள் கழட்டப்பட்டும் செல்வதற்கு தயராக இருந்தன. ரயிலில் பணிபுரியும் பணியாளர்களும், ரயில் நிலைய அதிகாரிகள் மட்டுமே தங்கள் பணிகளை அவசரஅவசரமாகபதட்டத்துடன் செய்தனர். அங்கிருந்த கேண்டீன் மூடப்பட்டிருந்தது. நடைபாதையில் எந்த வியாபாரமும், அதற்கான சத்தமும் இல்லாமல் பேரமைதியாய் ரயில் வண்டியின் சத்தம் மட்டுமே கேட்டது. நின்ற நேரம் வேகமாக சென்றது. யாரும் ரயிலிலிருந்து இறங்கவும் இல்லை.ஏறவும் இல்லை. தண்டவாளங்களில் திசைப்பிரிவு மாற்றம் நடந்தது. உச்சி சூரியஒளி தனது தீக்கனலை பாரபட்சமில்லாமல் ரயில்நிலையப்பகுதியெங்கும் வியாபித்திருந்தது. நின்றிருந்த அனைவரும் தன்னை பாதுகாக்க நிழலை நோக்கி வேகமாக ஓடினார்கள். ரயில் நகர்வதற்கான அனைத்து விதிகளும் முறையாக கடைபிடிக்கப்பட்டு,ஏற்றுக்கொண்ட உச்சரிப்பு சத்தத்துடன் ரயில் நகர ஆரம்பித்தது.
ரயில் காட்டுப்பகுதியை கடந்து முட்புதர்களின் ஊடே சென்று கொண்டிருந்தது. கரிசல்மண்ணின் கந்தகத்தீயின் வெக்கை, சாளரத்தின் வழியேகண்களை சுட்டெறித்தது. அமர்ந்திருந்த அனைவரின் முகமும் வெக்கை தாங்காமல் கருவேரிப்போயிருந்தது. அனைவருக்குமே உடனே ஊர் வந்து விடாதா..என மனம் பதறியது. நீண்ட அமைதியை தாங்காத குழந்தையுடன் வந்திருந்தஇளம்தாய், தன் கணவரிடம்
இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு”அவள் வார்த்தைகள் சத்தமற்றிருந்தது. யாருக்கும் எதுவும் கேட்டதாக தெரியவில்லை.ஆனாலும் அனைவருமே அவள் கணவனின் முகத்தையே பார்த்தார்கள். அவன் ‘நெருங்கிவிட்டோம்”என்றான். அனைவருக்கும் அந்த வார்த்தையால் மூச்சு வந்தது.
ரயில் முன்னை விட சற்று அதிகரித்த வேகத்தில் சென்று கொண்டிருந்தது. கடக்..கடக்.. என்ற சத்தம் வேகமாக கடந்து சென்றது. எவ்வளவு நேரம்ரயில் இப்படி சென்றது என்று யாருக்கும் தெரியவில்லை. ஒருவருக்கொருவர் எந்த உணர்வுமற்றும் பார்த்துக்கொண்டிருந்தனர். ஒளியற்ற அவர்களின் கண்கள் மிரட்சியாயிருந்தது. வெயில் அவ்வளவாக இல்லாவிட்டாலும் அனைவரின் முகமும் வியர்த்துக்கொட்டியது. ரயில் செல்லும் வேகத்தில் வரும் காற்றையும் மீறி தாங்கமுடியாத அளவுபுழுக்கமாக இருந்தது. அந்த சிறுகுழந்தை, அம்மாவின் சேலை முந்தானையில் ரயிலின் வேகத்தில் செல்லும் நிழல் அசைவை கண்டு சிரித்துக்கொண்டிருந்தது. திடீரென்று க்ரீச்.. என்ற சத்தம். அனைவருக்கும் ஒரு நிமிடம் உயிர் உள்ளே போய்விட்டு வந்தது. ரயில் நின்று விட்டது. வெளியில் இரும்போடு இரும்பு மோதியது போல் டமால்..டமால்.. என்ற சத்தம். ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் சடசட.. என சன்னல் இரும்பு திரைகள் மூடும் சத்தம், ரயில்பெட்டிகளின் கதவுகள் மூடும் சத்தம்.. ஆண்களும்,பெண்களும், குழந்தைகளும்அபயக்குரல் சத்தம், மனிதர்களின் ஓடும் கால்களின் வேகத்தில் நெஞ்சை பதற வைக்கும் பூமியின் அதிர்வு. அங்கும் இங்கும்ஆயுதத்தோடு ஓடும் மனிதர்களின் தரிகெட்ட கோபக்கூப்பாடுகள்.ரயிலில் உள்ள அனைவருமே உயிர்பயத்தில் அழுகையோடு புரியாத வார்த்தைகளில் புலம்பி, பெட்டிகளின் ஏதோ ஓரத்தில் பம்மியிருந்தார்கள். அந்தப்பெட்டியின் கடைசிப்பகுதியிலிருந்துஒருவன் வேகமாகமூச்சிறைக்க ஓடிவந்தான்.அவன் கைகால்கள் பதட்டமாய் இருந்தது. அனைவரும் பயந்த நிலையில் எழுந்து நின்றார்கள். அவன் கண்களில் உயிர் பயம் தெரிந்தது.எல்லாம் தெரிந்தது போல்,இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற முடிவில் அந்த தாய் அழுதாள்;.விக்கி..விக்கி அழுதாள். ஓப்பாரி வைத்து புலம்பினாள்.
’இப்படியாடா ஆகணும் நம்ம நிலம.
இத்தனவருசங்கழிச்சுஇந்த வயசுலஎன் சாவுஇப்படியா நடக்கணும்.
போன ஜென்மத்திலநான்என்ன பாவம்பண்ணினனோ..தெரியலயே..”
அந்த தாயின் வார்த்தைகள் அனைவருக்கும் அடிவயிற்றை கலக்கியது. அந்த பெட்டியிலிருந்தஒரு இளைஞன் மூச்சிறைக்க ஓடிவந்தவனை அணைத்து ஆசுவாசப்படுத்தினான். கொஞ்சம் தண்ணீர் குடித்தபின் நிதானமானான். வாயிலிருந்து திக்கி தினறி.. தெளிவற்ற வார்த்தைகள் வந்ததது. அவனை எல்லாருமேதேவதூதனாய் பார்த்தார்கள். ரயிலை சுற்றி வளைத்தது தெற்கூர்கார உறவுகள்தான். இந்தப்பெட்டியில் யாரும் பயப்பட தேவையில்லை எனறு தெரிவித்தான். அந்த தாயின் அழுகை நிற்பதாயில்லை. புதிதாக வந்திருந்த அவனை பார்த்து பார்த்து அழுதாள். அந்தப்பெட்டியிலும் சாளரக்கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால்,அவள் அழுகைச்சத்தம் வெளியில் கேட்டிருக்காது.
அந்த தாயின் மகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.சாவது உறுதி. நம்மை சுற்றி வளைத்து விட்டார்கள். அம்மாவின் அழுகை அவனை மேலும் மேலும் பயமுறுத்தியது.அவன் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. அவன் தாயின் தலையில் கையை வைத்து சமாதனப்படுத்தினான். அழுகை நின்ற பாடில்லை. இவர்கள் இருவரைத்தவிர மற்றவர்கள் தங்களுக்கு ஆபத்து இல்லை என்பதில் உறுதியானர்கள். அனைவரின் கண்களும்அந்த தாயின் அழுகையைத்தான் உற்றுக்கவனித்தது. என்ன செய்வதென்று யாருக்கும் தெரியவில்லை. ஆனாலும் ஏதாவது செய்து அவர்களை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் ஓடியது. அந்த தாயின் அழுகுரல் அனைவரையும் உசுப்பியது. கொஞ்சம் கொஞ்சமாக அனைவரின் கண்களும் அன்பின் வழியே இரக்கமானது. யார் முன் கை எடுப்பது என்பதுதான் பிரச்சனை. ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். கண்களில் ஈரம் வற்றவில்லை. நீண்டபுழுக்கத்தை சிறிது மௌனம் உடைத்தது.அந்த இளைஞன் ஏதோ முடிவுக்கு வந்தது போல்எழுந்தான். தயவு செய்து அனைவரும் நான் சொல்வதை கவனியுங்கள்.
ஆபத்து நம்மை நெருங்கி விட்டது. இந்தப்பெட்டியில் அந்த அம்மாவைத்தவிர,அவர்கள் மகனையும் நம்மோடு சேர்த்து தெக்கூர் என்றால் நம்பி விடுவார்கள், அதனால் பயப்படவேண்டாம். அந்த தாயை மட்டும் சிறிது நேரத்திற்கு மறைத்து விட்டாள். அனைவருமே நிம்மதியாய் ஊர் போய் சேரலாம்.
என்ன நினைக்கிறீர்கள்?
உடனடியாக சொல்லுங்கள்.காலதாமதம் நமக்குத்தான் ஆபத்து என்றான்..
எல்லோருமே மௌனமாய் கண்களில் இசைவை தெரிவித்தார்கள்.
அவன் வார்த்தைகள் அந்த அம்மாவிற்கு கூடுதல் அழுகையை உண்டு பண்ணியது.அழுகையில் விம்மல் மட்டும் இருந்தது.
அவள் மகன்
அம்மா.. …..அவர் சொல்லும் வார்த்தைகளை கேளம்மா..
நமது உயிரை காப்பாற்றிக்கொள்ளஇதைத்தவிர வேறு வழியில்லை..என்றான்.
அதற்குள் அந்த இளைஞன் முடிவெடுத்ததைப்போல்.. அம்மா நீங்கள் சிறிது நேரம் கழிப்பறையில் இருங்கள்..மற்றதை நான் பார்த்துக்கொள்வேன். ஆயுதங்களோடு வரும் அவர்களிடம் யாரும் எதுவும் பேச வேண்டாம். இந்த உத்திரவாதத்தை கொடுத்தால் போதும் என்றான். அனைவரும் மிகுந்த பரிவோடு தங்களது இசைவை தெரிவித்தார்கள்.
அந்தக்கும்பல் கடைசிப்பெட்டியின் சமீபத்தில் வந்துவிட்டார்கள். அவர்கள் நெருங்க..நெருங்க ..பெட்டிக்குள்ளிருந்த அனைவருக்கும் பதட்டம் உச்சத்தை நெருங்கியது. அந்த தாய் கழிப்பறைக்குள், வெளியே வருவதற்கான ஊர்ஜிதமான தகவல் வரப்பெறும் வரை சிறு விசும்பல் சத்தம் கூட கேட்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டிருந்தது. சாஸ்திர சம்பிரதாயமான அந்த அம்மா கழிப்பறைக்குள் குடியிருந்து கொண்டிருந்தாள். வெளியில் ரயில் கதவை உடைப்பது போன்ற பலத்த சத்தம் கேட்டது. அவர்கள்தான். ஆயுதங்களோடுரயில் பெட்டிக்குள் நுழைய ஆயத்தமாகிவிட்டாகள். கதவு திறக்கப்பட்டது. திமுதிமுவென விதம்விதமாக கிடைத்ததெல்லாம் ஆயுதமாக வெறித்தனமான வார்த்தையுடன் உள் நுழைந்தனர்.ரயிலின் பெட்டி உள்ளே சகல திசையும் அலறியது. அனைவருமே உயிரை கையில் பிடித்து பதட்டத்துடன் நின்றனர். பெண்களும் பிள்ளைகளும் பயங்கர கூக்குரலுடன் அழுதனர். அந்த கும்பலில் ஒருவன்
‘இங்க பாருங்க..நீங்க யாரும் பயப்படாதீங்க..
உங்கள நாங்க ஒன்னும் செய்ய மாட்டோம்..
எங்க எதிரி நீங்க இல்ல..வடக்கூர்காரங்கதான், எதிரி..
அவங்கள யாரையாவதுஇங்க பாத்தேங்களா?உண்மைய சொல்லுங்க..
அவன் கையில் வைத்திருக்கும் இரும்புக்கம்பியால் சாளரத்தின் மேல் புறத்தில் ஓங்கி தட்டி அரற்றினான். ஒவ்வொரு அறையாக கும்பலாக தட்டி அரற்றிக்கொண்டே சென்றார்கள். அவர்கள் நடையே, வெட்டவா குத்தவா அடிக்கவா என்றிருந்தது. அந்த அம்மா இருந்த பெட்டிக்கு வந்துவிட்டார்கள். அவர்களின் வெறித்தனமான சத்தம் ,கையில் வைத்திருந்த ஆயுதங்களால் பெட்டியின் மேல்தளத்தில் அடிக்கும் சத்தம், அங்கிருந்த அனைவருக்குமே தாங்கமுடியாத விழிகள் பிதுங்கி வெளியே விழும்பயம் வந்தது. ஏற்கனேவே அந்த அறையில் உள்ள இளைஞனிடம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற அனைவரும் எதுவும் பேசாமல் இருந்தார்கள். கழிப்பறையில் மறைந்திருக்கும் அந்த அம்மா யாரென்று தெரிந்து விடுமோ என்ற பயத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
அந்த கும்பலில் ஒருவன் சந்தேகமான நிலையில்ஒருவன் சட்டையை பிடித்து
‘ யேய் .. ..உனக்கு எந்த ஊர்ல “
அவன் பயந்து போய் முகமெல்லாம் வியர்த்து அழுகும் நிலைக்கு வந்து விட்டான். அவன் திக்கித்திக்கிபதில் சொல்ல வாயெடுக்கும் முன் அண்ணே..அவன் நம்மாளுதான்..பயப்படவேண்டாம்.. இந்த அறையில் சந்தேகித்துக்குரிய மனிதர்கள் யாரும் இல்லை என்று அந்த அறை இளைஞன் நிதானமாக தெளிவாகச்சொன்னான். அவன் கும்பலுக்கு அறிமுகமான ஆள்.அவன் வார்த்தைகள் அவர்களுக்கு திருப்தியானது போல் திரும்பினார்கள்.
அந்த அம்மாவின் மகனுக்கு மூச்சு நின்று விடவிடத்து விட்டது. நிராவதரவான நிலையில் கழிப்பறையில் தன்தாயை நினைத்த மாத்திரத்தில் சாவின் கடைசி விழும்பில் நிற்பதை போல்அழுகை முட்டிக்கொண்டு வந்தது.அனைவருமே அவன் ஒவ்வொரு அசைவையையும் கவனித்தார்கள். அந்தக்கும்பல் நகர ஆரம்பித்தது.அந்த பெட்டியை விட்டு வெளியேறுவதற்காக கழிப்பறையின் எதிர்புறத்தில் உள்ள கதவினை திறந்தார்கள். அந்த அம்மா கழிப்பறையின் ஓரத்தில் சேலைத்தலைப்பை வாயில் திணித்து விம்மி வரும் அவள் அழுகையை அடக்கினாள். அந்த கும்பலின் கால் அதிர்வில் அவளுக்கு பயம் கொப்பளித்தது. அந்த கும்பலை அந்த இளைஞனும் பின் தொடர்ந்தான். அவர்கள் வெளியேற கதவை திறக்கும் வரை அவனுக்குள்ளும் பயம் இருக்கத்தான் செய்தது. அந்த தாய் பிடிபட்டாள் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையை முறித்து விடுவார்கள் என்று அவனுக்குத்தெரியும். நம்பிக்கை முறிந்தால் இங்கு இரண்டு சாவு விழும். மனம் கணத்தது. எல்லா பலத்தையும் காலில் தாங்கி அவர்களை பின்தொடர்ந்தான்.அவர்கள் படிக்கட்டின் வழியே வெளியேறிக்கொண்டிருந்தார்கள். அந்த பெட்டியை விட்டு கடைசி மூன்று பேர் இறங்கும் போதுதான் அப்படி நடந்தது. இரண்டாவதாக வந்த அவன் கழிப்பறையை கவனித்துவிட்டான். பக்கென்றாகிவிட்டது. கும்பல் திரும்புவதற்கு முன் அவன் தனது தாய்தான் கழிப்பறையில் இருக்கிறாள் என்றும்,பயந்து போனதால்திரும்பத்திரும்ப வெளிய போய்கொண்டிருக்கிறது என்றும் இருந்தாலும் வயதாகிவிட்டதால் ஊருக்கு சென்றதும் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்றும் கூறினான். சிறிது யோசித்து நின்றான். அந்த கும்பலின் கடைசி மனிதன் வா..செல்வோம் என அவர்களின் யோசனையை களைத்தான். கடைசி மூன்று பேரும் இறங்கினார்கள். அந்த இளைஞன் வாசலில் நின்று அவர்கள் செல்வதையே கவனித்துக்கொண்டிருந்தான். கோபத்துடன் அந்த ரயிலை தட்டிக்கொண்டேபோட்டும்..போட்டும்.. வெறியான வார்த்தைகளால் விரட்டிக்கொண்டு சென்றனர்.
தூரத்தில் அவர்கள் செல்வதையே வாசலில் நின்று பார்த்துக்கொண்டிருந்த அவன் மூச்சிறைத்து தன்னை நிதானப்படுத்தினான். கதவை இழுத்துச்சாத்தினான். ஆனாலும் அவனுக்குள்ளிருந்த பயம் சரியாகவில்லை. ரயில் கிளம்பிய பின்பு கழிப்பறைக்கதவை திறந்து அந்த தாயை விடுவிக்கலாம் என முடிவெடுத்தான். அனைவரிடமும் அப்படியே சொன்னான். இப்பொழுதும் யாரும் எதுவும் பேசவில்லை. நடந்து முடிந்த அத்தனை பயமான நிகழ்வுகளும் அவர்கள் கண்களில் கண்ணீராய் ததும்பி நின்றது. அந்த தாயின் மகன் எழுந்து ஓடிவந்து அவன் கையை பிடித்து முகத்தில் வைத்து அழுதான். விம்மி விம்மி அழுதான். அவன் வாயிலிருந்து எந்த வார்த்தைகளும் வரவேயில்லை. அவனுக்கு அந்த இளைஞன் தங்களை காத்த தெய்வமாக தெரிந்தான். மற்ற அனைவருக்கும் அந்த காட்சி உசிதமாகத்தெரிந்தது. யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. எல்லாம் காற்றில் கரைந்தது போல் ரயில் நகர ஆரம்பித்தது. தூரத்தில் விசில் சத்தம் கேட்டது. கடக்..கடக்..சத்தம் அவர்களை கடந்து சென்றது. ரயிலின் வேகம் சிறிது அதிகரித்தது. அனைவரின் முகத்திலும் சிறிய கோடுகளாய் சிரிப்பு.
யாரும் எதிர்பாராத நிலையில் கழிப்பறைக்கதவு திறந்தது. அவன் வேகவேகமாக அம்மாவை நோக்கி ஓடினான். அந்த கை அவளுக்கு புதிது. அவளுக்கு அளவுகடந்த ஆதரவாகவும், அவள் மகனை விட உயர்ந்த நிலையிலும் அந்த கை இருந்தது. அந்த தாயின் கை அவன் கையை இருக்கியது.அவன் கையை தன் முகத்தில் வைத்துஅய்யா...ராசா..மகாராசா..நீ நல்லா இருப்பயா.. தெய்வமா வந்து காப்பதனய்ய….குடும்பம் குட்டியோட நீ நல்ல ..இருப்ப…அவள் அழுகையான வார்த்தைகள் அனைவருக்கும் மெளனமாய் கண்ணீரை வரவழத்தது, அனைத்தும் புரிந்த நிலையில் அந்த அம்மாவிடம் அவன் எதுவும் பேசவில்லை. அவள் எத்தனையோ முறை அழுதிருக்கிறாள். தன் உயிரின் பயத்தை கண்ணீரில் கரைத்து அழுதிருக்கிறாள். அழுகையின் விம்மலில் கண்கள் வீங்கி நின்றது. அந்த தாய் நம்பிக்கையோடு அவன் கையைப்பிடித்து நடந்து வந்தாள். அனைவரும் எழுந்து நின்றுஅவர்களை வரவேற்பது போல் பார்த்தனர். ஊர் பக்கத்தில் வந்து விட்டது. ஒருவருக்கொருவர் நட்பை பரிமாறிக்கொண்டார்கள். அனைவர் முகத்திலும் கண்ணீரோடு சந்தோசம் வந்து போனது. ரயிலின் கிரீச்...என்ற சத்தம். ஊர் வந்து விட்டது. நடைபாதை முழுவதும் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தார்கள். ரயில் வண்டிக்குள்ளிருந்த அனைவரும் ஆதரவாய்,கைத்தாங்கலாய் அந்த அம்மாவை படிக்கட்டிலிருந்து தரை தளத்திற்கு இறக்கி விட்டார்கள்.அனைவரும் ரயில்வண்டிடயை விட்டு வெளியேறினார்கள். ஊர் எல்லையை மிதித்ததும் லேசான காற்று முகத்தை வருடியது.காலங்காலமாய் காத்திருந்தது போல் அந்தக்காற்று இருந்தது.மனம் எத்தனை சுதந்திரமாய் வானில் பறந்தது,
அந்த தாய் அவள் மகன் கையை பிடித்து தெக்கூரை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.


Comments

  1. வாழ்த்துக்கள் சாரதி! உங்கள் இலக்கியப்பயணம் சிறக்கட்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

துர்ஷினியின் பிரவேசம் (இது ஒரு ஆன்ட்ராய்டு கதை)

அவனின் கழிவறை